பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சிந்தனைகள்

26. நெஞ்சிலே இட்ட நெருப்பு

“ரத்தக் கண்ணீர் சினிமா வரை சொல்லிக்கொண்டு வத்துவிட்டீர்கள். ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி விவகாரங்கள் பற்றி மட்டும் சொல்கிறேன், சொல்கிறேன் என்று இன்னும் சொல்லவேயில்லையே?” என்று நான் மீண்டும் ஒரு முறை அதை ராதாவின் நினைவுக்குக் கொண்டு வந்தேன். அவர் கொஞ்சம் தயக்கத்தோடு சொன்னார்;

“அந்த விவகாரங்களை நான் இந்த நாட்டுக்கும், நாகரிகத்தின் எல்லையையே தொட்டுவிட்டதாக எண்ணிக்கிட்டிருக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் சில சமயம் சொல்லணும்னும் நினைக்கிறேன்; சில சமயம் சொல்ல வேணாம்னும் நினைக்கிறேன். என்னுடைய தயக்கத்துக்கு அதுதான் காரணம். அந்த அளவுக்கு அது காட்டுமிராண்டித்தனமானது; கர்ணகடூரமானது; இன்றைய மனித குலம் முழுவதையுமே வெட்கத்தால் தலை குனிய வைக்கக் கூடியது. அதைப்பத்தி நான் மொதல்லே கேள்விப்பட்டப்போ என் நெஞ்சிலே யாரோ நெருப்பை வாரிக் கொட்டியது போல இருந்தது...”

“அது என்ன கொடுமை, அப்படிப்பட்ட கொடுமை ?”

“அந்தக் கொடுமை இங்கு மட்டுமில்லே, இந்த உலகம் பூராவுமே பரவியுள்ள கொடுமைங்கிறது அப்புறந்தான் எனக்குத் தெரிஞ்சது. ஆஸ்கார் ஒய்ல்டுன்னு யாரோ ஒரு இலக்கிய மேதை மேல் நாட்டில் இருந்தானாமே...?"