பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறைச்சாலைச் சிந்தனைகள்

15


என அண்ணன் ஜானகிராமன் நல்லாப் படிப்பான்; அவனுக்கு எங்க அம்மா ரெண்டு மீன் வைப்பாக. நானும் என் தம்பி பாப்பாவும் படிக்க மாட்டோம். அதுக்காக எங்களுக்கு ஒரே ஒரு மீன் வைப்பாக. இந்த வித்தியாசத்தை ஒரு நாள் என்னாலே பொறுக்க முடியாமப் போச்சு; எனக்கும் ரெண்டு மீன் வச்சாத்தான் ஆச்சு'ன்னு அடம் பிடிச்சேன். ‘ஊரைச் சுத்தற பயலுக்கு ஒண்ணு போதாதா?ன்னு அம்மா என் தட்டிலே ரெண்டு வைக்கிறதுக்குப் பதிலா முதுகிலே ரெண்டு வெச்சாக. அவ்வளவு தான்; எழுந்து நடந்துட்டேன்.”

“எங்கே ?”

“எழும்பூர் ஸ்டேஷனுக்கு. அப்போ எனக்கு ஏழெட்டு வயசுதான் இருக்கும்; அங்கே போனப்புறம்தான் எங்கே போறதுன்னு எனக்கு ஒண்ணும் புரியலே. பிளாட்பாரத்தைச் சுத்திச் சுத்தி வந்துக்கிட்டிருந்தேன். ஏலே பயலே, இங்கே வாடான்’னு ஒரு குரல் கேட்டது; திரும்பிப் பார்த்தேன். கனத்த பெட்டியுடன் என்னை நோக்கி வந்துகிட்டிருந்த ஒருவர், இதை எடுத்துக்கிட்டு வான்னு என்கிட்டே பெட்டியைக் கொடுத்தார். அப்போல்லாம் ‘போர்ட்டர்'னு யாரும் தனியா கிடையாது; என் மாதிரி பொடிப் பயலுகதான் அந்த வேலையையும் செய்துக்கிட்டிருந்தானுக. நான் பெட்டியைத் தூக்கிக்கிட்டுப் போய் அவர் வைக்கச் சொன்ன இடத்திலே வெச்சேன். அவர் காலணாவை எடுத்து என் கையிலே கொடுத்துட்டு, ‘உன் பேரு என்னடா ?ன்னு கேட்டார்; ராதா'ன்னேன். அப்பா, அம்மால்லாம் இருக்காங்களா ?'ன்னார்; ‘ஒருத்தரும் இல்லே'ன்னு சொல்லி வெச்சேன். அப்படின்னா என் டிராமா கம்பெனியிலே சேர்ந்துடறியா ? நான் தான் ஆலந்தூர் டப்பி ரங்கசாமி நாயுடு எங்கிறவரு; கேள்விப்பட்டிருப்பியே ?ன்னார்; ‘நல்லாக் கேள்விப்பட்டிருக்கேன்; சேர்ந்துடறேன்'னேன். சரி, ஏறு வண்டியிலே'ன்னார்; ‘டிக்கெட் வாங்கலையான் ?'னேன். அதெல்லாம் ஒண்ணும் வாணாம்; “சும்மா ஏறு ‘ன்னு அவர் என்னை வண்டியிலே ஏத்திவிட்டு, ஒரு பெஞ்சுக்குக் கீழே பதுங்கி உட்கார்ந்துக்கச் சொன்னார். நான் அப்படியே உட்கார்ந்துக்கிட்டேன். அவர்