பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

விந்தன்


அப்போ தளபதி அண்ணாவாயிருந்தாலும், நானும் ஒரு விதத்திலே அவருக்கு உதவித் தளபதியாயிருந்து வந்தேன். அதாவது, நான் ஏதாவது செய்ன்னா தொண்டருங்க உடனே செய்யத் தயாராயிருந்தாங்க. அந்த ரயிலிலோ தளபதி அண்ணா வரல்லே. அவருக்குப் பதிலா, என்ஜினுக்கு முன்னாலே கட்டுங்கடா, கழகக் கொடியை'ன்னு நானே ஆர்டர் போட்டேன். அப்படியே கட்டினாங்க. அதைத் தடுக்காத கார்டு வண்டி புறப்படற சமயத்திலே, பெட்டிக்குப் பெட்டி தொத்திக்கிட்டு நிற்கிற தொண்டருங்க அத்தனை பேரும் வண்டியை விட்டுக் கீழே இறங்கினாத்தான் பச்சைக் கொடி காட்டுவேன்’னு அடம்பிடிக்க ஆரம்பிச்சார். ‘அப்படியா சமாசாரம்?’னு நான் முதல்லே வண்டியை விட்டுக் கீழே இறங்கி, ‘அய்யா சொல்றாரு, அங்கே இங்கே தொத்திக்கிட்டிருக்கிறவனுங்கெல்லாம் இறங்கிப் பிளாட்பாரத்திலே நில்லுங்கடா, வண்டி பாசானதும் ஏறுங்கடா'ன்னேன். அப்படியே இறங்கினாங்க. கார்டு பச்சைக் கொடி காட்டினார். வண்டி நகர்ந்தது; பிளாட்பாரத்திலே நின்ன அத்தனை பேரும் மறுபடியும் தொத்திக்கிட்டாங்க!”

“கார்டுக்கு எரிச்சலாயிருந்திருக்குமே ?”

“இருந்து என்ன செய்யறது? கதர்ச் சட்டையாயிருந்தாலும் கொஞ்சம் மிரட்டிப் பார்த்திருப்பார்; கறுப்புச் சட்டையாச்சே!”

“சரி, அப்புறம் ?”

“இத்தனை அமர்க்களமா நடந்த அந்தத் தூத்துக்குடி மாநாட்டுக்குத் தளபதி அண்ணா வரல்லே...”

“ஏன் ?”

“கருத்து மோதல்தான் காரணம்.”

“பெரியாருக்கும் அண்ணாவுக்கும் அப்போதே கருத்து மோதல் இருந்ததா?"