பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

விந்தன்


30. தருமம் தலை காக்கும்

“இந்த நாட்டிலே மனுஷனா வாழறதை விட நாயா வாழறது நல்லதுன்னு சிலர் நின்னைக்கிறாங்க; நாயா வாழறதைவிட மனுஷனா வாழறது நல்லதுன்னு சிலர் நினைக்கிறாங்க. நானோ நாயா வாழறதை விட மனுஷனா வாழறதுதான் நல்லது'ங்கிற முடிவுக்கு வந்தேன். அந்த முடிவுக்கு நான் வர ஒரு காரணம் ரெண்டு காரணம் இல்லே, எத்தனையோ காரணங்கள் இருந்தன...”

“அந்தக் காரணங்களை... ?”

“இப்போ நான் சொல்றதும் ஒண்ணுதான். சொல்லாம விடறதும் ஒண்ணுதான்...”

“சரி, விடுங்கள்; அப்புறம்?”

“அதுக்கு மேலே என்ன நடந்தது, நான் ஏன் ஜெயிலுக்குப் போனேங்கிறதெல்லாம் உங்களுக்கும் தெரியும்; இந்த உலகத்துக்கும் தெரியும். அதைத் திரும்பத் திரும்பச் சொல்லி, மேலே மேலே கசப்பை வளர்த்துக்கிட்டிருக்க நான் விரும்பல்லே. அப்படிச் சொல்லச் சொல்லி என்னை வற்புறுத்தறவங்களுக்கெல்லாம் நான் சொல்ற பதில் இதுதான்-'தயவு செஞ்சி என் வழக்கு சம்பந்தப்பட்ட விவரங்களைக் கொஞ்சம் விரிவா வெளியிட்டிருக்கிற பேப்பருங்களை எடுத்து வைச்சிக்கிட்டு இன்னொரு தடவை ஊன்றிப் படியுங்க என்கிறதே அது. அதுங்களிலே இருக்கிற என் வக்கீல்களின் வாதங்கள் உங்களுக்கு உண்மையை ஓரளவாவது எடுத்துக் காட்டும். ‘சட்டம் ஓர் இருட்டறை; வக்கீலின் வாதம் விளக்கு'ன்னு சொன்னார் பேரறிஞர்