பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறைச்சாலைச் சிந்தனைகள்

21


"இருந்தது; அதாலே அந்தக் கம்பெனியையும் விட்டுட்டு ஆஞ்சநேயர் கோவிந்தசாமி நாயுடு கம்பெனியிலே சேர்ந்துட்டோம். அங்கே எங்களுக்கு அதிகமா கிடைச்சது ரெண்டு...”

“என்னென்ன ?”

“ஒண்ணு அடி, இன்னொண்ணு உதை’

“இப்போது சொல்ல வேடிக்கையாயிருக்கிறது: அப்போது வேதனையாயிருந்திருக்கும்...”

“அந்த வேதனையைப் பொறுக்க முடியாமல் என் தம்பி வேறே தொழிலுக்குப் போயிட்டான்; நான் மட்டும் ஜகந்நாதய்யர் கம்பெனியிலே சேர்ந்துட்டேன்...”

“அதுவும் நாடகக் கம்பெனிதானா?”

“ஆமாம், ஒரிஜனல் பாய்ஸ் கம்பெனின்னா அதுதான், அப்போ ஒரிஜனல் பாய்ஸ் கம்பெனியாயிருந்தது. காலையிலே எழுந்ததும் குளிக்கிறது, தோத்திரப்பாடல் பாடறது, வேளா வேளைக்குச் சாப்பிடறது எல்லாமே அங்கே ஒழுங்கா நடந்து வந்தது. அது மட்டும் இல்லே. ‘சமபந்தி போஜனம்'னா அந்தக் காலத்திலே பெரிய விஷயம். அது ஜகந்நாதய்யர் கம்பெனியிலே சர்வ சாதாரணம். எந்தவிதமான பேதமும் இல்லாம அவர் எங்களோடு உட்கார்ந்து சாப்பிடுவார். சில பிராமணப் பிள்ளைக அப்படிச் சாப்பிடமாட்டோம்னு சொல்லும். அதுகளை மட்டும் தனியா உட்கார்த்து சாப்பிடச் சொல்லிவிடுவார். எதையும் வற்புறுத்தித் திணிக்க அவர் விரும்பமாட்டார். நான் சந்தித்த முதல் சீர்திருத்தவாதி அவர்தான். அவருடைய கம்பெனியிலேதான் எஸ்.வி.வேங்கடராமன், பி.டி.சம்பந்தம், கே.சாரங்கபாணி, சி.எஸ்.ஜெயராமன், யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை, நவாப் ராஜமாணிக்கம் எல்லாரும் இருந்தாக.”

“கிட்டப்பா இல்லையா ?"