பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறைச்சாலைச் சிந்தனைகள்

27


'எல்லாம் எங்க அய்யர் செஞ்ச வேலைதான். யாராயிருந்தாலும் சொல்லிக் கொள்ளாமல் கம்பெனியை விட்டுப் போனா அவருக்குப் பிடிக்காது. உடனே ‘கம்பெனி நகையைத் திருடிக்கிட்டுப் போயிட்டான்’னு போலீசிலே புகார் எழுதிக் கொடுத்துடுவார். அதை வைச்சி அவங்க அந்த ஆசாமியைப் பிடிச்சிக் கையிலே விலங்கு போட்டு இழுத்துக்கிட்டு வந்துடுவாங்க.”

“பாவம், என்.எஸ்.கே.!”

“பாவமாவது ? அந்த விஷயத்தை அவர் அவ்வளவு சீரியஸா எடுத்துக்கல்லே; அதையும் காமெடியாவே எடுத்துக்கிட்டார். அந்த நாளிலே எடுத்ததுக்கெல்லாம் வண்டி ஏது, வசதி ஏது ? கொல்லத்திலிருந்து மதுரைக்கு அவரைக் கால் நடையாவே அழைச்சிக்கிட்டு வந்திருக்காங்க. அவரும் சளைக்காம அவுட்போஸ்ட்டுக்கு அவுட்போஸ்ட் கையில் விலங்கோடு நின்று, மலையாளத்திலும் தமிழிலுமா மாறி மாறித் தத்துவப் பாடல் பாடிக்கிட்டே வந்திருக்கார்!”

“முதலில் அவர் டி.கே.எஸ்.கம்பெனியில் இருந்ததாகவல்லவா கேள்வி ?”

“அது எங்கே இருந்தாரோ அது எனக்குத் தெரியாது; அவர் எங்க கம்பெனியிலேயிருந்து அங்கே போனது தான் எனக்குத் தெரியும்.”

“அய்யர் கம்பெனி நல்ல கம்பெனி என்கிறீர்களே, அதிலிருந்து அவர் ஏன் போக வேண்டும்?”

“வாழ்க்கையிலே வெறும் வசதி மட்டும் கெடைச்சாப் போதாது, பேரும் புகழும் கூடவே கெடைக்கணும்னு நினைப்பவர் அவர். அந்தப் பேரும் புகழும் எங்க கம்பெனியிலே அவருக்குக் கிடைக்க அப்போ வழியில்லே...”

“ஏன்?"