சிறைச்சாலைச் சிந்தனைகள்
49
"பலன் ஏதாவது... ?”
“என்னாலே டாக்டர்களுக்கு ஒரு பைசாக்கூட வருமானம் கிடையாது; அது போதாதா ?”
“அப்படியானால் டாக்டர்களிடையேயும் இப்போது ‘வேலையில்லாத் திண்டாட்டம் பரவியிருப்பதற்கு நீங்களும் ஒரு காரணம் என்று சொல்லுங்கள்’
“திண்டாட்டம் வேலை தெரிஞ்சவனுக்கு எப்பவும் எதிலும் இருக்காது; தெரியாதவனுக்குத்தான் இருக்கும்’
“அதுவும் ஒரு விதத்தில் சரிதான்; அப்புறம்?”
“தமிழ் நாடக மேடையிலே ஸ்டண்டுக்கும் சந்தர்ப்பம் கொடுக்கும் சமூக நாடகம் அப்பத்தான் தலைகாட்ட ஆரம்பிச்சிருந்தது. அதுக்குக் காரணமாயிருந்து, முதல்லே கதை எழுதிக் கொடுத்தவர் டி.கே.பாவலர்...”
“எந்த டி.கே.பாவலர்?”
“மதுரை யுனிவர்ஸிடி வைஸ்சான்ஸ்லராயிருந்தாரே டி.பி. மீனாட்சிசுந்தரம் பிள்ளை, அவர் தம்பி. அவர் எழுதிய ‘பதி பக்தி’ நாடகத்திலே எனக்கு சி.ஐ.டி. வேஷம். அந்த வேஷத்துக்காக டக்ளஸ் பேர்பேங்ஸ் டிரஸ் மாதிரி டிரஸ் தைச்சி எனக்கு மாட்டிவிடுவாங்க. அதுவே எனக்கு என்னவோ போல இருக்கும். நம்ம ஊர் சி.ஐ.டி. மாதிரி டிரஸ் தைச்சிப்போட்டுக்கிட்டா என்ன ?ன்னு நினைப்பேன். இருந்தாலும், சமயத்துக்குத் தகுந்தாப் போல வேஷம் போடறவன்தானே சி.ஐ.டி.. ?ன்னு என்னை நானே சமாதானம் சேஞ்சிக்கிட்டு மோட்டார் சைக்கிள்லே ஏறி உட்கார்ந்து, ‘டபடபா'ன்னு ‘ஆடியன்ஸ்’ மேலே, பாயறாப்போல மேடைக்கு வந்து, ‘டக்'குன்னு திரும்பி நிற்பேன். அவ்வளவுதான்; ‘ஆடிட்டோரியம் பூராவும் ஒரே ‘கிளாப்'ஸாயிருக்கும்...”
“அப்போதும் உங்களுக்குச் சம்பளம் சாப்பாடு போட்டு மாதம் ஐந்து ரூபாய்தானா?"