பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சிந்தனைகள்

56


"நாடகத்திலே சண்டை போடறப்போ, என்னைக் கீழே தள்ளி ஒரே அமுக்கா அமுக்கிடச் சொல்லி போடிநாயக்கனூரான்கிட்டே சொல்லி வைச்சிருந்தாங்க. இந்த விஷயம் என் காதுக்கு எட்டிச்சி. அப்படியா சமாசாரம்?’னு நான் ஒரு வேலை சேஞ்சேன்...”

“அது என்ன வேலை ?”

“சி.ஐ.டி. வேஷம்னா கையிலே துப்பாக்கி இல்லாமலிருக்குமா? அதுக்காக என் கையிலே ஒரு துப்பாக்கி கொடுத்து வைச்சிருந்தாங்க... நெஜத் துப்பாக்கியில்லே; வெத்துவேட்டுத் துப்பாக்கிதான். அந்தத் துப்பாக்கியிலே ‘பால் பேரிங்’ எஃகு ரவைகளைப் போட்டு, அதுக்கு மேலே பஞ்சை அடைச்சி வைச்சுக்கிட்டேன்...”

“இந்த விஷயம் அவர்கள் காதுக்கு எட்டவில்லையா?”

“எட்ட விடுவேனா? அந்த மாதிரி அஞ்சாம் படை ஆளையே நான் எப்பவுமே என்னோடு சேர்த்துக்கமாட்டேன். அன்னிக்கு ராத்திரி நடந்த நாடகத்திலே அந்தப் போடிநாயக்கனூரான் எப்பவும் போல என்னோடு சண்டை போட வந்தான்... சண்டைக்கு நடுவே நான் வழக்கம்போலத் துப்பாக்கியை எடுத்தேன்; ஆனா வழக்கம்போல நாடகக் கொட்டாயின் கூரையைப் பார்த்துச் சுடல்லே; அவன் விலாவைப் பார்த்துச் சுட்டேன்... அவ்வளவுதான்; ‘அம்மாடியோவ்’னு அலறிக் கிட்டே அவன் கீழே விழுந்தான். என்னடான்னு குனிஞ்சி பார்த்தா, என் துப்பாக்கிக்குள்ளே போட்டிருந்த அத்தனை குண்டுகளும் அவன் விலாவுக்குள்ளே பாய்ஞ்சிருந்தது!”

“ச்சுச்சூ!”

“எனக்கும் வருத்தமாய்த்தான் இருந்தது...ஏன்னா, என் நோக்கம் அவனைச் சும்மா மிரட்டி வைக்கணுங்கிறதுதான்; குண்டு இப்படிப் பாயும்னு நானும் எதிர்பார்க்கல்லே....”

“அப்புறம்?"