பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சித்தனைகள்

91


14. இழந்த காத’லில் சிவாஜி

“யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையின் நாடகக் கம்பெனி அப்போ பரமக்குடியிலே இருந்தது. அதை அங்கிருந்து கொண்டு போய்ச் சேர்க்க முதல்லே ஒரு இடத்தை ஏற்பாடு செஞ்சிக்க வேண்டாமா ? அதுக்காகச் சேலத்துக்கு வந்து ‘ஓரியண்டல் தியேட்டர் மருதப்பிள்ளை'யைப் பார்த்தோம். அவர் கிட்டே விஷயத்தைச் சொல்லி, நாடகம் நடத்த ஓரியண்டல் தியேட்டரிலே இடம் கொடுக்க வேணும்னும், நாடகச் சாமானுங்க ரயில்வே வேக்கின்லே வந்து இறங்கறப்போ அதை எடுக்க ஐந்நூறு ரூபா கடனாக் கொடுத்து உதவனும்னும் கேட்டுக்கிட்டோம். அவர் ‘சரி'ன்னு சொல்லிவிட்டார்.”

“தேவலையே, பணம்கூடச் சில சமயம் இருக்கிற இடம் தெரிந்து இருக்கும் போலிருக்கிறதே! இல்லாவிட்டால் நீங்கள் சொன்னதற்கெல்லாம் அவர் உடனே சரியென்று சொல்லியிருக்க முடியுமா ?”

“பணம் மட்டுமில்லே, அதிகாரம்கூடச் சில சமயம் இருக்கிற இடம் தெரிந்து இருக்கிறதில்லே; அதாலே வர ஆபத்துக்கள் தான் இந்த உலகத்திலே அதிகம்... அதை விடுங்க... நாடகம் நடத்த அட்வான்ஸ்’ இல்லாம தியேட்டர் கொடுக்கிறதுக்கும், வேக்கின்லே வர நாடகச் சாமான்களை கடனாப் பணம் கொடுத்து எடுக்கிறதுக்கும் ஆளைப் பிடிச்சாச்சு. அடுத்தாப்போலப் பரமக்குடியிலே இருக்கிற ரவுடிக் காண்ட்ராக்டருக்கு ‘டிமிக்கி’ கொடுத்து..."