பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

89



பயப்படவேண்டாம். இஸ்லாமானது பரவுவதற்கு இடம் கொடுக்க மாட்டோம். அதற்கு நானே பொறுப்பானவன்!” என்றார்.

இத்தகைய கெட்ட எண்ணம் குறைஷிகளுக்கு இருக்கும் போது, முஸ்லிம்களை எவ்வாறு அமைதியோடு இருக்க விடுவார்கள்?


69. மதீனாவில் மூன்று பிரிவினர்

பெருமானார் அவர்கள் மதீனாவுக்கு வந்த பொழுது, அங்கே மக்கள் மூன்று பிரிவினராக இருந்தனர்.

1.அன்சாரிகள் 2. முனாபிக்குகள் 3. யூதர்கள் ஆகியவர்களே மேற்படி மூன்று பிரிவினர்கள்.

1. அன்சாரிகள்: இவர்கள் ஒளஸ், கஸ்ரஜ் என்னும் இரண்டு கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் முஸ்லிம்களாகி, இரண்டு கோத்திரத்தினரும் ஒற்றுமையானார்கள்.

2. முனாபிக்குகள்: (நயவஞ்சகர்கள் என்று பொருள்) இவர்கள் வெளியே இஸ்லாத்தைத் தழுவிய முஸ்லிம்களாக நடித்துக் கொண்டு, உள்ளுர முஸ்லிம்களுக்கு விரோதிகளாக இருந்து வந்தனர். இக்குழுவினருக்கு அப்துல்லாஹ் இப்னு உபை என்பவர் தலைவராக இருந்தார். இவர் மதீனாவில் செல்வந்தராகவும், செல்வாக்கு உள்ளவராகவும் இருந்து வந்தார்.

பெருமானார் அவர்கள் மதீனாவுக்கு வருவதற்கு முன், அவருடைய ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. மதீனாவின் ஆட்சியே அவருடைய கைக்கு வரக் கூடிய நிலையில் காணப்பட்டது. ஆனால், பெருமானார் அவர்கள் மதீனாவுக்கு வந்து சேர்ந்ததும், நகரத்தின் நிலைமை மாறியது. அன்சாரிகளுடைய தன்னலமற்ற ஊக்கமும், நகர மக்களின் விழிப்பு உணர்ச்சியும் இப்னு உபையின் எண்ணம் நிறைவேற இயலாமல் செய்து விட்டது. ஆகையால், அவர் தம் வஞ்சகமான எண்ணத்தை மறைத்துக் கொண்டு, தம் கூட்டத்தாருடன் வெளிப் பார்வைக்கு முஸ்லிம் ஆகி விட்டார். அவர் உயிரோடு இருந்த வரை, முஸ்லிம்களுக்குப் பல வகையிலும் தீங்குகள் செய்து வந்தார்.