பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

137



முஸ்லிம் படை வந்த தகவல் தெரிந்ததும், ஹாரிதின் சேனைகளில் பலர் பல பக்கங்களிலும் சிதறி ஓடி விட்டனர். ஹாரிதும் தம் ஊரை விட்டு, வெளியேறி, ஒளிந்து கொண்டார். ஆனால், அவ்வூர் மக்கள் ஒன்று சேர்ந்து அணி வகுத்து நின்று கொண்டு, வெகு நேரம் வரை முஸ்லிம் படையின் மீது அம்புகளை எய்து கொண்டிருந்தனர். முஸ்லிம் படையினரும் சளைக்காமல், அவர்களைத் தாக்கிக் கொண்டிருந்தனர்.

இறுதியாக, பனூ முஸ்தலிக் கூட்டத்தார் தோல்வியுற்றனர்.

இச்சண்டையில், அக்கூட்டத்தாரில் பத்துப் பேர் வரை கொல்லப்பட்டனர். அறுநூறு பேர் வரை சிறைப்படுத்தப்பட்டனர். இரண்டாயிரம் ஒட்டகங்களும், ஐயாயிரம் ஆடுகளும் முஸ்லிம் படையினர் வசமாயின.

சிறைப் பிடிக்கப்பட்டவர்களுள் ஹாரிதின் மகள் ஜூவைரிய்யா என்னும் பெண்மணியும் ஒருவராவர்.

அந்தச் செய்தி அறிந்ததும், அவருடைய தந்தை ஹாரித் பெருமானார் அவர்கள் முன்னிலையில் வந்து “என் மகளைச் சிறைப் படுத்தி வைத்திருப்பது தகுதியானதல்ல. நான் மிகவும் கண்ணியமான குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆகையால், அவளை விடுவித்து விட வேண்டும்” என்று வேண்டிக் கொண்டார்.

பெருமானார் அவர்கள் அதற்கு, "ஜூவைரிய்யாவின் கருத்துப் படியே விட்டுவிடுவது நல்லது அல்லவா?” என்று சொன்னார்கள்.

உடனே ஹாரித் தம் மகளிடம் சென்று, “முஹம்மது உன்னுடைய கருத்துப்படி விட்டிருக்கிறார். என் கெளரவத்துக்கு இழுக்கு நேரிடாமல், நீ நடந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

அதற்கு ஜூவரிய்யா, “நபி பெருமானார் அவர்களின் தொண்டிலேயே இருக்க விரும்புகிறேன்” என்று கூறி விட்டார்.

அதன்பின், அந்தப் பெண்மணியைப் பெருமானார் அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்