பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140



அவர்கள் அள்ளி அப்புறப்படுத்திக் கொண்டும், சில சமயங்களில் அவர்களே தோண்டிக் கொண்டும் இருந்தார்கள்.

களைப்புத் தோன்றாமல் இருப்பதற்காக, அகழ் வெட்டும் தோழர்கள் அரபிக் கவிதையை மிகுந்த உற்சாகத்தோடு பாடிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கவிதையின் பொருள்:

“ஆண்டவனே! உன் கருணை எங்கள் மீது இல்லாதிருந்தால், நாங்கள் நேரான வழியை அடைந்திருக்க மாட்டோம்; தருமங்கள் செய்திருக்க மாட்டோம்; உன்னை வணங்கியிருக்க மாட்டோம்,

“ஆண்டவனே! எங்களுக்கு நலத்தையே அருள்வாயாக! பகைவர்கள் எங்களுக்கு எதிராக வந்தால், எங்களுடைய கால்கள் நிலையாக நிற்குமாறு கருணை புரிவாயாக. பகைவர்கள் எங்களைத் துன்புறுத்தி, இடையூறுகள் செய்து, எங்களை இஸ்லாத்தை விட்டு விடுமாறு செய்து விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், 'நாங்கள் அதை மறுத்து நிற்கிறோம்', 'நாங்கள் அதை மறுத்து நிற்கிறோம்,' 'நாங்கள் அதை மறுத்து நிற்கிறோம்'” என்ற இறுதிச் சொற்களைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

அவர்கள் எல்லோரும் அவ்வாறு பாடிக் கொண்டிருக்கும் போது, பெருமானார் அவர்கள், “ஆண்டவனே! மறுமையில் சுகமாயிருப்பதே உண்மையான சுகம். ஆகையால், அன்சாரிகளுக்கும், முஹாஜரீன்களுக்கும் கருணை காட்டி ஆதரிப்பாயாக!” என்று வேண்டிக் கொள்வார்கள்.


106. வழி காட்டிய ஒளி

பெருமானார் அவர்கள் கட்டளையிடுவார்களானால், அவர்கள் உத்தரவைச் சிரமேற் கொண்டு நிறைவேற்றுவதற்கு எத்தனையோ பேர் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், நாயகம் அவர்களோ மற்றவர்களைப் போலவே கடினமான வேலைகளையும் செய்தார்கள். தங்களைப் பின்பற்றுபவர்களுக்கும் அவ்வாறே உழைத்துப் பாடுபட வேண்டும் என்பதைக் காட்டுவதற்கே அவ்வாறு செய்தார்கள்.