பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

229



177. நிதி குவிந்தது! ஆட்கள் சேர்ந்தனர்!

இந்தத் தாக்குதலுக்கு முஸ்லிம்கள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என்று பெருமானார் அவர்கள் கட்டளையிட்டார்கள்.

பொருளும், கருவிகளும் பெருமானார் அவர்களிடம் வந்து குவிந்தன.

ஹலரத் உத்மான் 900 ஒட்டகங்களும், பத்தாயிரம் நாணயங்களும் அளித்தார்கள்.

ஹலரத் அப்துர் ரஹ்மான் இப்னு அல்பு 40,000 நாணயங்கள் கொடுத்து உதவினார்கள்.

ஹலரத் உமறு அவர்களிடம் அப்பொழுது ஏராளமான செல்வம் இருந்தது. அவர்கள் தங்களுடைய பொருளில் பாதியைத் தங்கள் குடும்பத்தாருக்காக வைத்துவிட்டு, பாதியைப் போருக்காகக் கொடுத்தார்கள்.

ஹலரத் அபூபக்கர் அவர்களோ தங்களிடம் இருந்தவை அனைத்தையும் பெருமானார் அவர்கள் முன்னிலையில் வைத்தார்கள்.

அதைக் கண்டு பெருமானார் அவர்கள், “தங்களுடைய குடும்பத்தாருக்காக ஏதாவது வைத்து விட்டு வந்திருக்கிறீர்களா?” என்று கேட்டார்கள்.

“ஆண்டவனும், அவனுடைய ரஸூலும் என்னுடைய குடும்பத்தாருக்குப் போதும்” என்றார்கள் ஹலரத் அபூபக்கர் அவர்கள்.

அபூ உகைல் என்னும் கூலியாளர் ஒருவர் மதீனாவில் இருந்தார். அவர் இரவு முழுவதும் கண் விழித்து ஒரு யூதரின் தோட்டத்துக்குத் தண்ணீர் இறைத்து நான்கு சேர் பேரீச்சம் பழம் சம்பாதித்தார். அதில் இரண்டு சேரை, தம் குடும்பத்தாருக்காக வைத்துவிட்டு, மீதி இரண்டு சேரை, யுத்த நிதியாகப் பெருமானார் அவர்களிடம் கொண்டு வந்து கொடுத்தார்.