பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242



இஸ்லாம் சம்பந்தமான சட்டங்களை விவரமாகக் கேட்டார். அதன் பின்னர், அவர், “'ஆண்டவன் ஒருவனே; அவனுடைய திருத்தூதர் முஹம்மது ஆவார்கள்' என்று நான் சாட்சி கூறுகிறேன். நான் இப்பொழுது திரும்பிச் செல்கிறேன். தாங்கள் எனக்குப் போதித்த விஷயங்களைச் சிறிதும் கூடுதலாகவோ, குறைவாகவோ கூற மாட்டேன்” என்று சொல்லி விட்டு அவர் புறப்பட்டார்.

அவர் சென்ற பின், பெருமானார் அவர்கள், அங்கே இருந்தவர்களிடம் “அவர் சொல்வது உண்மையாயிருந்தால், அவர் சுவர்க்கம் அடைவார்” என்று சொன்னார்கள்.

லிமாம் தம் ஊருக்குத் திரும்பிச் சென்று, கூட்டத்தாரிடம் (லாத், உஸ்ஸா என்னும் விக்கிரகங்களின் பெயரைக் குறிப்பிட்டு) "அவை ஒன்றுக்கும் உதவாதவை” என்றார்.

அக்கூட்டத்தார், “நீர் என்ன சொல்கிறீர்? உமக்குப் பைத்தியமாவது, தொழு நோயாவது வந்து விடக் கூடாதே” என்று சொன்னார்கள்.

அதற்கு லிமாம், “ஆண்டவன் பெயரில் சத்தியமாக, விக்கிரகங்களால் எனக்கு நன்மை செய்யவும் முடியாது; தீமை செய்யவும் முடியாது; நானோ ஆண்டவன் மீதும், முஹம்மதுர் ரஸுல் (ஸல்) அவர்கள் மீதும் விசுவாசம் கொள்கிறேன்” என்று கூறினார்.

அவர் கூறிய உண்மையான சொற்களைக் கேட்டதும் அன்று மாலைக்குள்ளாக, ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக அக்கோத்திரத்தார் அனைவரும் இஸ்லாத்தில் சேர்ந்து விட்டனர்.


189. மக்கள் நன்மைக்காக உயிர்த் தியாகம்

பெருமானார் அவர்கள், முன்பு தாயிபு நகர முற்றுகையிலிருந்து திரும்பும் போது, “தாயிபு நகர வாசிகளாகிய தகீப் கோத்திரத்தாருக்கு நேர்வழி காட்டி, அவர்களை என்னிடம் அனுப்பி வைப்பாயாக!” என்று ஆண்டவனை பிரார்த்தனை செய்தார்கள் அல்லவா? அவர்களுடைய பிரார்த்தனை நிறைவேறும் காலம் இப்பொழுது வந்தது.