பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9


பெருமையை அறிந்து வந்தவர். மக்கா வெற்றிக்குப் பின் மதீனா வந்து இஸ்லாத்தைத் தழுவினார். தம் ஊரான தாயிபுக்குச்சென்று இஸ்லாமியப் பிரச்சாரம் செய்யப் புறப்பட்டார். அவர் உயிருக்கு அபாயம் வருமென்று பெருமானார் தடுத்தார்கள். ஆனால் ஆர்வம் மேலிட்டால், தம் பணியைச் செய்ய தாயிபு சென்றார். அங்கேயே பகைவர்கள் அவரை அம்பெய்திக் கொன்று விட்டனர்.

கஃப் இப்னு மாலிக்-இவர் கஸ்ரஜ் கோத்திரத்தினர். இஸ்லாத்தைத் தழுவியவர். இஸ்லாமியக் கவிஞர்களில், மூன்றாவது இடத்தைப் பெற்றவர். பெருமானார் அவர்களால் சமூகப் பிரஷ்டம் செய்யப்பட்டு வருந்திக் கண்ணீர் வடித்து, பிறகு மன்னிப்புப் பெற்றவர்.

கத்தாப்-குறைஷிகளின் ஒரு முக்கிய கோத்திரமான அதீ கிளையைச் சேர்ந்தவர்.

கதீஜா-மக்காவில் குறைஷி கோத்திரத்தில் தோன்றியவர். பெரும் செல்வந்தர். அவருடைய வியாபாரப் பொருள்களைப் பெருமானார் விற்பனை செய்து இலாபத்தைப் பங்கிட்டுக் கொண்டனர். அவர் இரு முறை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தினார். முந்திய கணவன்மார்கள் இருவரும் இறந்து விட்டனர். எத்தனையோ குறைஷித் தலைவர்கள் அவரைத் திருமணம் செய்து கொள்ள முன் வந்தனர். அவர் விரும்பவில்லை. நாயகம் அவர்களின் கண்ணியம், நேர்மை, சொல் உறுதி ஆகியவற்றை அறிந்து அவர்களை மணந்து கொண்டார். தம்முடைய செல்வத்தைப் பெருமானார் அவர்களின் பொறுப்பிலே ஒப்படைத்து, வாரி வழங்கினார். இன்முகத்தோடு இல்லறம் நடத்தினார். அவர்களுக்கு காசீம், அப்துல்லாஹ், தாஹிர் ஆகிய மூன்று ஆண் மக்களும், ஸைனப், ருகையா, உம்மு குல்தூம், பாத்திமா ஆகிய நான்கு பெண்மக்களும் பிறந்தனர். ஆண்மக்கள் மூவரும் இளம் பருவத்திலேயே இறந்துவிட்டனர்.பிராட்டியார், பெருமானார் அவர்களுடன் இருபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்து, தம் 64-வது வயதில் இறப்பெய்தினர்.