பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19



இவர்களில் எவருடன் இருக்க, நீர் விரும்புகிறீர்?” என்று கேட்டார் முதியவர்.

புன்சிரிப்புத் தவழ, அபூதாலிப் அவர்கள் மடியில் போய் உட்கார்ந்தார்கள் பெருமானார்:

உடனே அப்துல் முத்தலிப் கண்களில் நீர் தளும்ப, தம் மகனை நோக்கி,” அபூதாலிபே! தாய் தந்தையற்ற இக்குழந்தைக்குப் பெற்றோரின் அன்பும், பாசமும் இன்னது என்று தெரியாது. ஆகையால், இக்குழந்தையை, ஒரு குறையும் இன்றி, மகிழ்வோடு வளர்த்து வருவாயாக!” என்றார்.

அதன்பின் சில நாட்களில் அப்துல் முத்தலிப் மனஅமைதியோடு காலமானார்கள்.


2. இணைபிரியாத வளர்ப்பு

அபூதாலிப் அவர்களின் ஆதரிப்பில் பெருமானார் அவர்கள் வளர்ந்து வந்தார்கள்.

தம்முடைய பிள்ளைகளுக்கும் மேலாகப் பெருமானார் அவர்களை அன்போடு நேசித்ததோடு, இணைபிரியாமல் கவனித்துக்கொண்டார்.

தூங்கும்போது கூடத் தம்முடனே தூங்க வைத்துக் கொண்டார்.

வெளியே போவதாயிருந்தால், கூடவே அழைத்துச் செல்வார். இவ்வாறு கண்ணும் கருத்துமாக இருந்தமையால் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிவதே இல்லை.


3. விளையாட்டிலே விருப்பம் இல்லை

பெருமானார் அவர்கள் இளம்பருவத்தில், தனித்திருந்து சிந்தனையிலே ஆழ்ந்து விடுவார்கள். மற்றப் பிள்ளைகளைப் போல் விளையாட்டுகளிலே நாட்டம் கொள்வதில்லை.

பெருமானார் அவர்களின் இளம் பருவத் தோழர்கள் ஒரு சமயம் தங்களுடன் விளையாட வருமாறு அழைத்தார்கள்.