பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50



சபையில் இருந்த பாதிரியார்கள் அதைக் கேட்டதும் வருத்தமுற்றனர்.

இனி, தங்களுடைய எண்ணம் எதுவும் கைகூடாது என்று கருதிய குறைஷிகளின் தூதர்கள் மக்காவுக்குத் திரும்பி விட்டனர்.


35. பழி வாங்கும் எண்ணம் இல்லை

குறைஷிகளின் தூதர்கள் அபீசீனியாவிலிருந்து தங்கள் எண்ணம் தோல்வியுற்றுத் திரும்பி வந்த செய்தியை அறிந்த குறைஷிகள் மிகவும் கோபம் அடைந்தனர்.

பெருமானார் அவர்களுக்கு முன்னிலும் அதிகமாகத் தொல்லையும், துன்பமும் கொடுக்கத் தொடங்கினர். அதனால் பெருமானார் அவர்களுடைய ஊக்கம் சிறிதும் தளரவில்லை.

பெருமானார் அவர்களின் சிறிய தந்தை ஹம்ஸா மாவீரர்; வேட்டையாடுவதில் விருப்பம் உடையவர். விடியற்காலையில் வில்லை எடுத்துக் கொண்டு வெளியே புறப்பட்டுப் போய் மாலையில் திரும்புவார்.

அவர் குறைஷிகளிடம் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். அவர்களுடைய நன்மதிப்பையும் பெற்றிருந்தார்.

அவரோ இஸ்லாத்தை தழுவவில்லை. ஆனாலும் பெருமானார் அவர்களிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார்.

ஒருநாள் அவர் வேட்டைக்குப் போயிருந்தார். அப்பொழுது, பெருமானார் அவர்களின் பகைவன்; குறைஷித் தலைவர்களின் ஒருவன், இஸ்லாத்தை வேரோடு ஒழிப்பதே தன்னுடைய நோக்கமாகக் கொண்டவன், பெருமானார் அவர்களின் தலையில் கல்லால் அடித்துக் காயப்படுத்தி விட்டான்.

அந்தக் கொடியவனின் செயலை, வேட்டையிலிருந்து திரும்பி வந்த ஹம்ஸா அவர்கள் அறிந்ததும், அடங்காக் கோபத்தோடு, அவனைத் தேடிப் போனார்.