பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60



பெருமானார் அவர்களுக்கு கதீஜா பிராட்டியாரிடம் ஒரு ஆணும், நான்கு பெண்களும் பிறந்தனர். ஆண் குழந்தை இளமையிலேயே இறந்து விட்டது. பெண்கள் நால்வருக்கும் திருமணம் செய்து வைக்கப் பெற்றது.

பெருமானார் அவர்களுக்கு நபிப் பட்டம் கிடைத்த பத்தாவது ஆண்டில், இரண்டு துக்க நிகழ்ச்சிகள் உண்டாயின.

ஒன்று: அபூதாலிப் அவர்களின் மரணம், இரண்டாவது: கதீஜா பிராட்டியாரின் மரணம்.

மிகுந்த உதவியாயிருந்த இருவரின் மரணத்தினால், பெருமானார் அவர்களின் உறுதி கொஞ்சமும் தளரவில்லை.

பெருமானார் அவர்கள், பிரியமானவர்களின் பிரிவினால் உதவியற்றவர்கள் ஆன போதிலும், ஆண்டவனிடம் அவர்களுக்கு அதிக நம்பிக்கை கூடியது.

ஆண்டவன் எப்பொழுதும் தங்களுக்கு உதவியாக இருப்பான் என்றும், அவன் செய்வது அனைத்தும் நன்மை அளிக்கத் தக்கதாயிருக்கும் என்றும் உறுதியோடு தொடர்ந்து செயல் புரியலானார்கள்.


43. ஆண்டவன் காப்பாற்றுவான்

அபூதாலிப், கதீஜா பிராட்டியார் ஆகிய இருவரின் பிரிவுக்குப் பின்னரும் பெருமானார் அவர்களுக்கு, குறைஷிகளின் கொடுமைகள் தொடர்ந்தன.

பெருமானார் அவர்கள், ஒருநாள் வழியில் போய்க் கொண்டிருக்கும் போது, குறைஷிகளின் கைக்கூலி ஒருவன் அவர்கள் தலையில் மண்ணை வாரி இறைத்து விட்டான்.

அந்த நிலையிலே அவர்கள் வீட்டிற்கு வந்தார்கள்.

பெருமானார் அவர்களின் புதல்வி பாத்திமா பீவி தண்ணீர் கொண்டு வந்து தலையைக் கழுவி விட்டு விட்டு, தந்தையின் மீதுள்ள பாசத்தினால் அழத் தொடங்கினார்.