பக்கம்:நம் நேரு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

நம் நேரு


ஜவஹரின் தந்தை மோதிலால் நேரு கொஞ்சம் கொஞ்சமாக மிதவாதக் கொள்கையை விலக்கிவிட்டுத் தீவிரம் பெற்று வந்தார். 1918-ல் கூடிய லக்ஷ்மணபுரிக் காங்கிரசில் அவர் தான் தலைமை தாங்கினர். அம் மகாசபையில் அரசாங்கத்தை எதிர்த்துத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று உணர்ந்த மிதவாதிகள் காங்கிரசைப் பகிஷ்கரித்தனர். பிறகு தனி இயக்கமாகப் பிரிந்துவிட்டார்கள்.

அந்நாட்களில் ஜவஹரின் பொதுப்பணியும் அரசியல் சேவையும் சர்வசாதாரண நிலையில் தான் இருந்தன. பொதுக் கூட்டங்களில் பேசத் துணியாது ஒதுங்கிவந்தார் அவர். இந்திய ஜனத்திரளின் முன்னே இங்கிலீஷில் பேசினால் எடுபடாது; ஹிந்துஸ்தானியில் தெளிவாக நீண்ட பிரசங்கம் புரியத் தன்னால் இயலாது என அஞ்சினார் அவர்.

1915-ல் தான் நேரு முதன் முதலாக பொதுக் கூட்டத்தில் சொற்பொழிவாற்ற முன்வந்தார். புதிய சட்டம் ஒன்றை எதிர்த்துப் பேசவேண்டிய அவசியம் ஏற்பட்டது. நேரு சுருக்கமாக ஆங்கிலத்தில் பேசி முடித்து விட்டார். நிகழ்ச்சிகள் முற்றுப் பெற்றதும் மேடை மீதே, மக்களின் கண்முன்னாலேயே, தலைவர் தேஜ் பகதுர் சாப்ரூ ஜவஹரை ஆறத் தழுவி உச்சி மோந்து பாராட்டினார். நேரு என்ன பேசினர் அல்லது எப்படிப் பேசினர் என்பதற்காக அளிக்கப்பட்ட பாராட்டு அல்ல அது. நேரு பொதுக்கூட்டத்தில் பேச முன்வந்து விட்டார்; தேசிய இயக்கத்துக்கு மற்றுமொரு பிரசாரகர் கிடைத்துவிட்டார் என்ற ஆனந்தப் பெருக்கு உந்திய செயல் அது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/41&oldid=1366185" இலிருந்து மீள்விக்கப்பட்டது