உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை-2.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

181


பன்றி. வளைவாய் ஞமலி – வளைந்த வாயினதான ஞமலி; 'மனைவாய் ஞமலி' எனவும் பாடம்; மனையிடத்தேயுள்ள நாய் என்று கொள்க. காட்ட – காட்டகத்ததான. நடுகாற் குரம்பை – கால் நட்டு வேய்ந்த குடிசை; சுவர் எழுப்பாதது என்க. எறிபுனம் – காட்டை யெறித்துச் செய்த புனம். வலம்படுத்தல் – வலப்புறமாக வீழச் செய்தல்.

விளக்கம் : 'அரவிரை தேரும் ஆரிருள் நடுநாள்' என்றது, அதனால் ஏதமுறுமோவெனத் தாம் அஞ்சியதைக் கூறி, இரவுக்குறி மறுத்தலாம். வேட்டுவனின் வல்லாண்மை கூறுவார், அவன் முள்ளம்பன்றியின் ஏற்றை வேட்டையாடியதைக் கூறினார்; இது அவர் காட்டில் திரிதலின் அவராலும் ஏதம் உண்டாகுமெனத் தாம் அஞ்சியது கூறிப்பகற்குறியும் மறுத்தலாம்.

'எறிபுனம்' என்றது, தினை கொய்து அழித்த புனம் என்றதுமாம். ஆகவே, பகற்குறியும் வாயாமை கூறி விலக்கியதாம். இதனால், பகற்குறியும் இரவுக்குறியும் விலக்கியவளாக வரைவு வேட்டனள் ஆயிற்று.

உள்ளுறை : வேட்டுவனாலே புண்பட்டு வீழ்ந்த முள்ளம் பன்றியின் ஏற்றை, மனைநாய்கள் சுற்றிச் சூழ்ந்து நின்று குரைத்தாற்போல், தலைவனின் அருளாமையாலே நெஞ்சம் புண்பட்ட தலைவியைச் சேரியிடத்து அலவற் பெண்டிர்கள் குழுமியவராக நின்று அலருரைப்பாராவர் என்றதாம். வேட்டுவன் தலைவனுக்கும், புண்பட்ட முள்ளம் பன்றி தலைவிக்கும், நாய்கள் அலவற் பெண்டிர்க்கும் உவமையாகப் பொருந்துவன கண்டு இன்புறுக.

286. அத்தக் குமிழின் ஆயிதழ் அலரி !

பாடியவர் : துறைக்குறு மாவிற் பாலங்கொற்றனார்
திணை : பாலை.
துறை : பிரிவிடை மெலிந்த தலைமகளை தோழி வற்புறுத்தது.

[(து.வி.) அவன் ஒரு வணிகர் பெருமகன். அவன் பொருள் தேடுதல் குறித்துப் பிரிந்தான். பிரிவுப் பெருநோயால் அவன் மனைவி வாடித் தன் நலனழிந்தாள். அது கண்டு, அவளுடைய தோழி அவளைத் தேற்றுவாளாகக் கூறுவது இச்செய்யுள்.]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/187&oldid=1675137" இலிருந்து மீள்விக்கப்பட்டது