உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை-2.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

211


பாண்டி நாட்டுக் கோடைமலைப் பகுதியில் மிகுதி; இதனை அறிந்து பாண்டியன் மாறன் வழுதி எடுத்துக் காட்டியுள்ளது சிறப்பாகும். இதன் தண்டு கருமையானது; இதனைக் 'கருங்கோல் குறிஞ்சிப் பூ' எனவரும் குறுந்தொகை (செய்.3)யாலும் அறியலாம். குவளையின் இணைமலர்களைக் கண்களுக்கு உவமை கூறுவதை 'மலர் பிணைத்தன்ன மாயிதழ் மழைக்கண்' என வருவதனாலும் அறியலாம் (நற். 252).

விளக்கம் : இவள், "வீட்டின் புறம்போந்து இரவுக்குறியில் நின்னால் தழுவுவதற்கு இனி வாய்த்தல் அரிது; எனவே, மணந்து கூடியின்புறலே இனிச் செயத்தக்கது" என்பதாம். 'தேமறப் பறியாக் கமழ்கூந்தலளே' என்றது, நின்னால் சூட்டப்பெறும் நறுமலர்களின் மணம் அதனை வேறுபடுத்தினும் அன்னை அறிவாள் என்பதாம். 'காமர் நெஞ்சமொடு' என்றது, எப்போதும் அன்பு பாராட்டுவாளான தாய், தன் மகளின் மணப்பருவப் புதுப்பொலிவு கண்டு, மேலும் அவள்பால் விருப்பம் கூடியவளாயினாள் என்பதாம்.

கழறிய பாங்கற்குத் தலைவன் தலைவியது மேம்பாடு கூறியதாகவும் இதனைக் கொள்ளலாம். பாண்டியன் கோடைப் பகுதியிலே கண்டு காதலித்த ஒரு கன்னியின் வனப்பைப் பாராட்டிக் கூறியது எனவும் கருதலாம். மேனி, கண், சாயல், கிளவி, வனப்பு, கமழ் கூந்தல் என உவமித்த சிறப்பு, அவன் அவளைப் பகற்குறியிற் பெற்றுக் கூடியவன் என்பதையும் புலப்படுத்துவதாம்.

302. சுடர்வீக் கொன்றை!

பாடியவர் : மதுரை மருதன் இளநாகனார்.
திணை : பாலை.
துறை : பருவங் கழிந்தது கண்டு தலைமகள் சொல்லியது.

[(து-வி.) முன்னர்ப் பிரிந்து சென்ற பொழுதிலே, 'தான் கார்காலத்து மீண்டு வருவதாகத் தலைவன் கூறிச் சென்றிருந்தான். அந்தக் கார்காலத்தின் வரவு வரைக்கும் அவன் பிரிவைப் பொறுத்திருந்தாள் தலைவி. கார்காலம் வந்ததும், அவள் வேதனையும் மிகுந்தது. அவள் நலிவு மிகுதியைக் கண்ட தோழி, அவளைத் தேற்றுவாளாகச் சில கூறவும், அவள் தன் மிகுதியான வருத்தத்தைத் தோழிக்குக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/217&oldid=1677971" இலிருந்து மீள்விக்கப்பட்டது