உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை-2.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

43


தல் நினக்கு இயலாதது ஆதலினாலும், வேட்டம் வாய்ப்பின் எமர் எந்நேரமும் திரும்புதல் கூடுமாதலானும், அவர் வந்து நின்னைக் காணின் ஏதம் உண்டாதல் கூடுமாதலானும், மாலை புன்கண் உடையதாகலின் தலைவியும் ஆற்றியிருப்பாள் அல்லள் ஆகலானும், இவை எல்லாம் இல்லாதிருக்க, இவளை நீதான் மணந்து கொள்ளலே இனிச் செய்வதற்கு உரியது எனக் குறிப்பால் உணர்த்தினள் என்றும் கொள்க.

மெய்ப்பாடு – பெருமிதம். பயன் – வரைவு கடாதல், இவை இரு துறைகட்குமே கொள்ளுக. ஒன்றை உணர்த்தும் போதும் குறிப்பால் நயமாக உணர்த்தும் நுட்பத்தை அறிந்து இன்புறுக.

'இருங்கழி முகந்த செங்கோல் அவ்வலை' (அகம் 90), "கோட்சுறாக் கிழித்த கொடுமுடி நெடுவலை' (அகம் 340) எனப்பிற சான்றோரும் உரைத்தலைக் காண்க.

216. வேட்டோரே இனியர்!

பாடியவர் : மதுரை மருதன் இளநாகனார்.
திணை : மருதம்.
துறை : தலைமகளுக்குப் பாங்காயினார் கேட்பத், தலைமகன் தலைநின்று ஒழுகப்படாநின்ற பரத்தை, பாணற்காயினும் விறலிக்காயினும் சொல்லுவாளாய் நெருங்கிச் சொல்லியது.

[(து.வி.) தலைமகனின் காதல் பரத்தையானவள், தனக்கு அவன்பாலுள்ள காதலின் மிகுதியை இவ்வாறு தலைவியின் பாங்கிலுள்ளோர் கேட்குமாறு எடுத்துக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது. பரத்தையரினும் இத்தகைய உழுவலன்பு உடையாரும் பலர் இருந்தனர் என்பதற்குக் கோவலன்பால் மாதவிக்கு இருந்த அன்பினையும் கூறலாம்.]


துனிதீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்
இனிதே காணுநர்க் காண்புழி வாழ்தல்!
கண்ணுறு விழுமங் கைபோல் உதவி
நம்முறு துயரங் களையார் ஆயினும்
இன்னா தன்றே அவரில் ஊரே! 5
எரிமருள் வேங்கைக் கடவுள் காக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/49&oldid=1663283" இலிருந்து மீள்விக்கப்பட்டது