உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

கின்றான்; செய்வதறியாது பெருமூச்சு விடுகின்றான்; வெறி கொண்டவன்போலத் திகைத்து நிற்கின்றான்.

2

மலைமேல் அழகிய இடம் அஃது. எதிரில் அருவிஉயர்ந்தே தோன்றுகிறது. அங்கு அருவியில் ஆடுவோர் ஒருவரும் காணோம். அஃது ஒரு மறைவான சூழல்; பெண்களே தனித்துக் குளிக்கும் இடம். முன்னாள் போலவே ஆடிப்பாடி நகை முகம காட்டிப்போக அவள் அங்கே தோன்றவில்லை. சுற்றிலும் பழமும் பூவும் பொலியும் மரங்கள் அடர்ந்துள்ளன. அப்பாலே தினைப்புனம் செழித்து வளர்ந்துகிடக்கின்றது.

கீழே பார்க்கிறான் அவன். குறவர் குடியிருப்பே தோன்றுகிறது. அதில், நடுவே ஒரு வீடு திறந்துவிளங்குகிறது. ஆம்; அதுதான் அவள் வீடு. முற்றத்தில் இத்தனை நாள் ஆடுகிற பெண்கள், இன்று வீட்டின் புறக்கடையில், பெண்களே புழங்கும் உள்வெளியில் ஆடுகின்றார்கள். ஆம்; அவளுடைய தோழிமார் கூட்டமே அஃது. இதோ அவளும் நிற்கிறாள்; முற்றத்தைப் பார்க்கிறாள்; மேல் நோக்கிப் பார்க்கிறாள். அவள் வெளியில் போகலாகாது எனத் தடை ஒன்று உண்டு என்பது தெளிவாகிறது.

"இனி எவ்வாறு சென்றடைவேன்?" என்று அவன் உள்ளம் வெடித்து ஒலிக்கிறது. அவனுக்கு முன்னாள் நினைவு வருகிறது. முன்னாள் பார்த்தது பார்த்தபடியே, அவன் கண்ணை விட்டகலாமல் காட்சி அளிக்கிறது. அவன் கருத்தாழத்தில் முறுகி எழுந்த காட்சி அது.

2