உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசுவரூப நாடகம்

இன்பம் எங்கே? அடியின் செம்மையும் இயக்கத்தின் அருளும், கருவினைத் தாய் காத்தல்போல் காக்கும் அன்பும், இன்பத் திருவிளையாடல்களே ஆம். பிரஹ்மானந்தத்தைக் கூறவந்த உபநிடதங்கள் அரசன் இன்பம், பேரரசின் இன்பம், தேவ இன்பம் என்று படிப்படியாய் இன்பம் உயர்வதனைக் காட்டி மேலும் முயன்று உயர மூடியாதவாறு எல்லாமாய் முற்றிநிற்கும் இன்பமே கடவுள் இன்பம் என முடிக்கக் காண்கிறோம். கட்டற்ற தட்டற்ற அதிகார நிலைகளின் இன்பங்களாக இவை உயர்ந்து வருமாறு உபநிடதம் அமைத்திருப்பதைக் காண்கிறோம். இன்பம் என்றால், கனியின் இன்பம். கட்டிப் பட்ட கரும்பின் இன்பம் என்ற புல இன்பங்களே பிறர் நினைவிற்கு வரும். பனிமலர்க் குழல் பாவைமார்தம் ஐம்புல இன்பத்துடன் கூடிய மனவகை அன்பு இன்பமும் நினைவிற்கு வரும்: அதிகார இன்பம் நினைவிற்கு வருவது அருமை. அதற்குமேலாம் இன்பமே வீடு எனக் கொண்டு சிறப்பதே தமிழன் கண்ட உண்மை. தனிமுடி கவித்தாளும் அரசினும் இனியன் ஈசன் என்று பாடுகிறார் திருநாவுக்கரையர். இதற்கு ஏற்பப் பேரின்பத்தைக்குறிக்கத் தட்டற்று உருளும் ஆக்ஞா சக்கரம் கொண்டு திகழும் திகிரியோனாக ஆண்டவனைக் காண்கிறார் பெருந்தேவனார். தட்டற்று விளங்குகிறது அச்சக்கரம். அரசன் இறைமையை ஒளி எனப் பேசவில்லையா வள்ளுவர்? ஆனால், எப்போது இதன் ஒளி விளங்கும்? ஈதொரு சிறப்பு ஒளி. தீமை அற்றொழிய நன்மையே இன்பமாய் வெள்ளமிடும்போது ஒளிர்கின்றது இந்தக் கடவுளாணை. எனவே, இன்பமும் இவ்வாறு விளக்கப்பெறுகிறது. இந்த இன்பம் அன்பாய்ப் பாய்வதன்றோ தீதற விளங்கும் நிலை.

117