உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

எண்வடிவமாம் காட்சி-சச்சிதானந்த வடிவம்-என்ற இவை எல்லாம், உலகமும் உயிரும் உடலாய்க்கொண்டு அவற்றின் உயிராய் விளங்கும் இந்தப் புதிய கடவுட் சமுதாயத்தின் ஒற்றுமை விளக்கத் தோற்றமாய், அண்டப் பேரரசின் இன்பப் பேரொளியாய் விளங்க, இறைவன் கோலத்தினைக் காண்கிறார் பெருந்தேவனார். உயிர்க்கு உயிருமாய் இருக்கின்றான் அவன். உயிருக்கு உடலுமாய் அமைகின்றான் அவன். மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம் என்பது பழைய கொள்கை. உயிரெலாம் சென்றுலவும் உடலும் ஆய் அரசன் விளங்குவது கம்பன் கண்ட புதுக்கொள்கை. கடவுட் பேரரசினிடம் இந்த இரண்டு தன்மையும் விளங்குதலான் அன்றோ உயிர்களுக்கு உடலாயும் உயிர்க்கு உயிராயும் இறைவன் உள்ள நிலைமையைப் பெருந்தேவனார் குறிக்கின்றார்! குடியரசும் முடியரசுமாய் நிற்கின்ற நிலையின் பெருமையே பெருமை. இத்தனைக் கருத்தினையும் கடவுட் காட்சியில் உள்ளடக்கி, உயிர்ச் சமுதாயக் கடவுள் ஒற்றுமையாகவும் உலக வரலாற்றொருமையாகவும் இதனைப் பெருந்தேவனார் காண்கின்ற சிறப்பினைச் சங்கப்பாடலின் சிறப்பாகவே கூறலாம்.

மாநிலம் சேவடி ஆக, தூநீர்
வளைநரல் பவ்வம் உடுக்கை ஆக.
விசும்புமெய் ஆக, திசைகை ஆக,
பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ஆக,
இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய
வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிரி யோனே.

—நற்றிணை-கடவுள் வாழ்த்து.

118