உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எல்லாம் அவளுக்கே

தோற்பது? அதுவும் ஒரு பெண்ணுக்கா?" என்று பாங்கன் இடித்துரைக்கின்றான்.

பேசத் தொடங்குகிறான் அவன்: "உம்—உம்! வெற்றி! வெற்றி! எல்லாம் பழம் பேச்சு. எல்லாம் வெற்று இறுமாப்பு! இன்று நான் எங்கே? தோல்வியே என் வடிவம். வருந்துகின்றேன் என்று நினைக்கிறாயா? வாழ்கின்றேன்; இன்றுதான் வாழ்கின்றேன். தோல்வியில் என்னைக் கண்டேன்; இன்பங் கண்டேன். தோற்றவன் எங்கே? எங்கே? எங்கும் இல்லை. வெற்றியடைந்தாளையே எங்கும் காண்கிறேன். அவளாகவே ஆகிவிட்டேன். அவளே நான். பெரு வெற்றி! அன்பின் வெற்றி! அதன் நுட்பம் இஃது! ஈது ஒரு கடவுட் புதுமை ! கண்டேன் நான் ! கண்டேன் நான் ! நீ எப்படி அறிவாய்!"

"நான் எப்படி அறிவேன்? நீ தான் சொல்."

"மலையமானை நீ புகழ்வாய். 'காரிக் குதிரைக் காரி' என்பாய். 'கருங் குதிரைமேல் அக் காரி — மலையமான்காரி—ஏறிச் செல்வான்' என்பாய். 'அவ்வளவுதான்—வெற்றிப்பறை கேட்கும்' என்பாய். 'உடுக்கை போன்ற பெரும் பறையினை, அவனோடு சென்ற புலையன் ஆரவாரத்தோடும் போர்ப் பறையாகக் கொட்டுவதே வெற்றிப் பறையாக ஒலிக்கும்' என்று புகழ்வாய். 'பகையரசர்—பகையும் வேண்டுமோ?—பிறர் என்று எதிர் நின்றாலே போதும்; அவர் நாட்டின்மேல் பாய்வான் மலையமான் ; கைப்பற்ற முடியாத அரிய அரண் எல்லாம் அழித்து ஒழிப்பான்' என்பாய். நண்பா, உன் மலையமான் வெற்றியினும் மிகப் பெரிய வெற்றி, அவளது வெற்றி !"

35