உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

நற்றிணை தெளிவுரை


விளக்கம் : "பகலெல்லாம். கடமையாற்றிய கதிர் மண்டிலமும் மாலைக்கண் சென்று மறைகின்றது; பறவையினங்கள் குஞ்சுகளைச் சென்று சேர்கின்றன: மான் பிணையைத் தழுவி இன்புறுகின்றது; மாடுகளும் அவற்றை மேய்ப்பாரும் வீடு திரும்புகின்றனர்; அவர்மட்டும் என்னை மறந்தனர்" என வருந்துகின்றாள் தலைவி. 'புதரிடத்து மலர்ந்த செங்காந்தட் பூக்கள் விளக்கு ஏற்றினாற்போலத் தோன்றும் என்றது, அதுவும் மனைவிளக்கு விளங்கும் இல்லத்து நினைவை எழுப்பாதோ' என்றதாம். 'குவியிணர்த் தோன்றி ஒண் பூ அன்ன தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல்' எனவரும் மதுரைக் கண்ணனாரின் குறுந்தொகைப் பாட்டடிகளும் (குறு. 107, 1-2) தோன்றியின் செவ்வொளிச் சிறப்பைக் காட்டும். 'அருளில் மாலை' என மாலைக் காலத்தைக் குறை கூறினள்; 'அவர்தாம் அருளிலராயினார். உலகுக்கெல்லாம் வாழ்வளிக்கும் இந்த மாலைக் காலமுமோ எனக்கு அருளற்றதாகிக் கொடுமை செய்தல் வேண்டும்" எனக் கூறினளாய் வருந்துகின்றாள் தலைவி.

70. அன்போ? மறதியோ?

பாடியவர் : வெள்ளி வீதியார்.
திணை : மருதம்.
துறை : காமம் மிக்க கழிபடர் கிளவி.

[(து–வி.) தலைமகனின் பிரிவினாலே காமநோய் மிகுதியுற்றாளான தலைவியொருத்தி, நாரையை நோக்கித் தன் துயரைக் கூறுகின்றாள். இதனை வெள்ளிவீதியாரின் சொந்த அநுபவமாகவும் கொள்ளலாம்.]

சிறுவெள்ளாங் குருகே! சிறுவெள்ளாங் குருகே!
துறைபோகு அறுவைத் தூமடி அன்ன
நிறங்கிளர் தூவிச் சிறுவெள்ளாங் குருகே!
எம்ஊர் வந்துஎம் உண்துறைத் துழைஇச்
சினைக்கெளிற்று ஆர்கையை அவர்ஊர்ப் பெயர்தி; 5
அனையஅன் பினையோ, பெருமற வியையோ,
ஆங்கண் தீம்புனல் ஈங்கண் பரக்கும்
கழனி நல்ஊர் மகிழ்நர்க்குஎன்
இழைநெகிழ் பருவரல் செப்பா தோயே?

வெள்ளிய சிறு குருகே! வெள்ளிய சிறு குருகே! நீர்த்துறையிடத்தே ஒலித்தற்குப் போய்வந்த வெள்ளாடையின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/139&oldid=1678175" இலிருந்து மீள்விக்கப்பட்டது