உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

நற்றிணை தெளிவுரை


காணும் குறக்குலத்துச் சிறுவர்கள், அப்பெருமலையிடத்துள்ள மூங்கிலை வளைத்து, அதன் முற்பக்கத்து ஏறிக்கொண்டவராக விசைத்து அதனோடும் மேலெழுந்தபடியே கைத்தாளம் கொட்டி மகிழ்வார்கள். குழுமிய காவற் காட்டை உடையதான தலைவியிருக்கும் சிற்றூரானது அந்தக் குன்றகத்தே உள்ளதாகும். நறுமணக் கூந்தலாளான அந்தக் குறமகள்தான், அச் சிற்றூரிடத்தே வாழ்கின்றாள். அவளுடைய கையகத்தேதான் அவளன்றிப் பிறரானே விடுவித்தற்கு ஏலாதபடி அவளாற் பிணித்துக் கொள்ளப்பட்ட என் நெஞ்சமும் உள்ளதாகும்.

கருத்து : 'என் நெஞ்சம் பிணித்தாளை என்னால் மறத்தற்கு இயலாது' என்பதாம்.

சொற்பொருள் : கழை – மூங்கிற்குழல். இயம் – வாத்தியக் கருவி. இரங்கல் – மெல்லென இசையொலி எழுப்புதல். கறங்கல் – ஒலிமிக்க இசையின் எழுச்சி. பல்லியம் கறங்கல் – கூட்டிசை ஒலித்தல். ஆடுமகள் – கயிற்றில் நடந்து கூத்தாடி மகிழ்விக்கும் ஆடன்மகள்; கழைக்கூத்தி. அதவம் – அத்தி.

விளக்கம் : "ஒன்றைக் குறித்து அமைத்த கயிற்றிடத்தே மற்றொன்று ஆடிநின்று நகைப்பதற்கு இடமாயின தன்மைபோன்று, என் உள்ளத்தே நிழலாடும் தலைவியைக் குறித்து நான் கண்டிருக்கும் காதற்கனவுகளிலே அவளையன்றிப் பிறள் ஒருத்தியை ஏற்றிவைத்து ஆட்டுவித்துக் சுண்டுகளிக்க நீயும் விரும்பினாய் போலும்?" எனப் பாங்கன் தலைவனது நோயது பொருந்தாமையைத் தகுதி காட்டிப்பழிக்கத் தலைவன் கூறுவதாக நுண்பொருள் காணலாம். 'கழை முனையிலேறி விசைத்து மேலெழுந்து ஆடிக்களிக்கும் குறச்சிறாரைப்போலக், கண்வழி உள்ளத்தினுள் ஏறி நின்று அவள் ஆடிக்களிக்க யான் நோகின்றேன். அதுகண்டு நீயும் மகிழ்கின்றாயோ' என்பதும் ஆம்.

இறைச்சி : கூத்தி நடந்த கயிற்றில் மந்தி வன்பறழ் தூங்கியாடுமாறு போல, ஒழுக்கத் தகுதியான் என்னை திண்மையாக்கிக் கொண்டிருந்த நிலையினும், என்னுளத்தே அவள் புகுந்து ஆட்டமிடுகின்றாள் எனவும், அது கண்டு நகைத்துக் களிக்கும் குறச்சிறு மகாரைப்போல. நீயும் என் துயரை அறியாயாய்ச் சிரித்தனை எனவும் சொல்வதாகக் கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/189&oldid=1685983" இலிருந்து மீள்விக்கப்பட்டது