உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

நற்றிணை தெளிவுரை


பகுத்து முடித்தற்குரிய கூந்தலை ஈரம்போகத் துவர்த்தினராக, எனக்கு அவர் அருளிச்செய்த கடற்றுறையும் உதுவே ]யாகும் என்றும்,

வளைந்த கழியிடத்தே உயர்ந்து தோன்றும் நெடிய தண்டையுடைய நெய்தலின், அழகாக மாறுபட்ட நெறிப்பையுடைய தழையினைக் கொய்து தொடுத்து எனக்கு அணி பெறுமாறு உடுப்பித்துவிட்டு, அவர் என்னை நீங்கித் தனியராகச் சென்ற கடற்கானலும் அதுவேயாகும் என்றும்,

அவ்வண்ணம் நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும் உள்ளம் உருகினாயாய், மெல்ல மெல்லப் பசப்பினையும் அடையப்பெற்று, இவ்வேளை முற்றவும் பசலையால் மூடப் பெற்றனையே!

கருத்து : 'இனி நீ உய்யும் வழிதான் யாதோ?" என்பதாம்.

சொற்பொருள் : மாமலர் – சிறந்த மலர். 'புதுவது புணர்ந்த' – இயற்கைப் புணர்ச்சியிற் கலந்த, பொம்மல் – பொலிவு. திரையாடல் – திரையிடத்து மூழ்கியும் மேலெழுந்தும் கடல்விளையாட்டு அயர்தல். கொடுங்கழி – வளைந்த கழியிடம். பகைத்தழை – மாற்று நிறம் பெறத் தழைகளை இட்டுத் தொடுத்த தழையாடை.

விளக்கம் : 'புணர்ந்த பொழில் இது; அருளிய துறை உது; சென்ற கானல் அது' என நினைந்து நினைந்து தளர்தலால், மேனி பசந்தனள், எனக் கூறினாளாய்க், 'களவிடைச் சிறு பிரிவுக்கே இத்தன்மை நலியும் இவள்தான் இனியும் என்னாவளோ?' என இரங்கினான் தோழி. இதனைக் கேட்கும் தலைவன் தலைவியின் நலிவுக்குத் தன் பிரிவே காரணமாதலை அறிந்து வருந்துவானாய், அவளைப் பிரியாதேயிருந்து வாழ்கின்ற இல்லறவாழ்வினைத் தரும் வரைந்து கோடலிலே மனஞ்செலுத்துவான் என்று கொள்க. தலைவியர் தலைவருடன் கடலாட்டயர்வது. 'கடலுடன் ஆடியும், கானல் அல்கியும்' என வரும் குறுந்தொகை (294) யடிகளாலும் விளங்கும்.

97. பூவிற்பாள் கொடியவள்!

பாடியவர் : மாறன் வழுதி.
திணை : முல்லை.
துறை : பருவங்கண்டு ஆற்றாளாய தலைவி, தோழிக்கு உரைத்தது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/191&oldid=1687551" இலிருந்து மீள்விக்கப்பட்டது