உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

நற்றிணை தெளிவுரை


பிற பாடங்கள் : கூரலகன்ன, எம்வயின் சினவிய முகத்தம், புலம்பிரி வயிரியர், நெடுநெறி.

101. தங்குதற்கு இனிது!

பாடியவர் : வெள்ளியந் தின்னனார்.
திணை : நெய்தல்
துறை : பின்னின்ற தலைமகன், தோழி கேட்பச் சொல்லியது.

[(து–வி.) நங்கை நல்லான் ஒருத்தியைக் கண்டு காமுற்று நலிந்தானாகிய ஒரு தலைவன், அவளைத் தனக்குக் கூட்டுவித்து உதவுதற்கு வேண்டியவனாக, அவளுடைய தோழிபாற் சென்று தன் குறையைத் தெரிவித்து இரந்து நிற்கின்றான். அவன் அதற்கிசைய மறுக்கவே, அவன், அவள் கேட்குமாறு தன் நெஞ்சுக்குக் கூறுவான்போல இப்படிக் கூறிக்கொள்ளுகின்றான்.]

முற்றா மஞ்சட் பசும்புறம் கடுப்பச்
சுற்றிய பிணர சூழ்கழி இறவின்
கணங்கொள் குப்பை உணங்குதிறன் நோக்கிப்
புன்னைஅம் கொழுநிழல் முன்உய்த்துப் பரப்பும்
துறைநணி இருந்த பாக்கமும் உறைநனி 5
இனிதுமன்; அளிதோ தானே—துனிதீர்ந்து
அகன்ற அல்குல் ஐதுஅமை நுசுப்பின்
மீன்எறி பரதவர் மடமகள்
மான்அமர் நோக்கம் காணா ஊங்கே!

அவள் தான் முற்றவும் வருத்தம் தீர்ந்ததாய் அகன்று பரந்திருக்கின்ற அல்குல் தடத்தினள்; மெல்லிதாக அமைந்திருக்கும் இடையினள்; மீன் வேட்டமாடி வாழ்வோரான பரதவரது மகள்; இளமைச் செவ்வியினையும் உடையவள்; மானின் நோக்கோடும் மாறுபாடுடையதான அமர்ந்த கண்களின் நோக்கில் யானும் படுவதற்கு முன்பாக, முற்றாத இளமஞ்சளது பசிய மேற்புறத்தைப்போல தோன்றும் சருச்சரையினைக் கொண்ட இறாமீனினது கூட்டங்கொண்ட தொகுதிகள் சூழ்ந்த கழியிடத்தே மிகுதியாகக் காணப்படும்; அவற்றை வேட்டம்கொண்டு, புன்னைக் கொழுநிழல் அழகிதாக விளங்கும் இடத்திற்கு எதிர்ப்படவிருக்கும் வெயிற்புறத்தே காயவிட்டிருப்பர். இறாமீனின் குவியல் காய்வதை ஆராய்ந்தபடியே நிழலிடத்தே காவலுமிருப்பர் இப்பாக்கத்துப் பெண்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/199&oldid=1687587" இலிருந்து மீள்விக்கப்பட்டது