உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

239


122. நீயே ஆராய்க!

பாடியவர் : செங்கண்ணனார்.
திணை : குறிஞ்சி
துறை : சிறைப்புறமாகத் தோழி தலைவிக்கு உரைப்பாளாய்த் தலைவன் கேட்பச் சொல்லியது.

[(து–வி.) களவுப் புணர்ச்சியை விரும்பிவந்த தலைவன் குறியிடத்தின் ஒரு பக்கமாகச் செவ்வி நோக்கி ஒதுங்கி நிற்கின்றான். அவனது வரவை அறிந்தாளான தோழி, தலைவிக்கு உரைப்பாள் போல, அவனும் கேட்டு உணருமாறு கூறுவது இது]

இருங்கல் அடுக்கத்து என்னையர் உழுத
கருங்காற் செந்தினை கடியு முண்டன
கல்லக வரைப்பில் கான்கெழு சிறுகுடி
மெல்லவல் மருங்கின் மௌவலும் அரும்பின
'நரைஉரும் உரறும் நாம நள்ளிருள் 5
வரையக நாடன் வரூஉம் என்பது
உண்டுகொல்? அன்றுகொல்? யாதுகொல் மற்று?' என
நின்று, மதிவல் உள்ளமொடு மறைந்தவை ஆடி,
அன்னையும் அமரா முகத்தினள்; நின்னோடு
நீயே சூழ்தல் வேண்டும்; 10
பூவேய் கண்ணி; அது பொருந்து மாறே.

கருங்குவளைப் பூவினைப் போலத் தோற்றும் கண்களை உடையவளான தலைவியே! பெரிதான மலையின் சாரற்புறத்தே, என் தமையன்மார் உழுது வித்திய கரிய அடித்தண்டினை உடைய செந்தினையின் கதிர்கள் முற்றவும் கொய்யப்பட்டன. மலைகள் சூழ்ந்த இடத்திலே இருக்கின்ற காட்டுப்பகுதி நிறைந்த சிறுகுடியிருப்பின் மென்மையான பள்ளப் புறங்களிலேயுள்ள மல்லிகையிடத்கே, அரும்புகளும் தோன்றியுள்ளன. வெள்ளிய மின்னல்களோடு இடிகள் முழக்கஞ்செய்யும் அச்சத்தையுடைய நள்ளிருட்போதிலே. 'குன்றக நாடன்' வருவான் என்பது உண்மையாமோ? உண்மையன்றோ? ஆயின், இவளது நலிவிற்குக் காரணந்தான் யாதோ?' என, நிலையாக ஆராயும் ஆய்வுத்திறனைக் கொண்ட உள்ளத்துடனே, மறைவாக நின் நோயினது காரணத்தை ஒற்றாடியறிய முயன்றவளாக, அன்னையும் கொடுமை தோன்றும் முகத்தினளாக, உறக்கமின்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/240&oldid=1690842" இலிருந்து மீள்விக்கப்பட்டது