உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

347


தோழியின் உதவியை நாடுகின்றான் குடும்ப நல்வாழ்வைக் கருதிய தோழி, அவர்களை மீண்டும் ஒன்றுசேர்க்கக் கருதுகின்றாள் அவள் பேச்சுத் தலைவிபால் எடுபடாமற் போயிற்று. அதன்பின், அவள் தன்னை வெறுத்துக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

பழனப் பாகல் முயிறுமூசு குடம்பைக்
கழனி நாரை உரைத்தலின் செந்நெல்
விரவுவெள் ளரிசியின் தாஅம் ஊரன்
பலர்ப்பெறல் நசைஇநம் இல்வா ரலனே
மாயோள் நலத்தை நம்பிவிடல் ஒல்லாளே 5
அன்னியும் பெரியன் அவனினும் விழுமிய
இருபெரு வேந்தர் பொருகளத்து ஒழித்த
புன்னை விழுமம் போல
என்னொடு கழியும்இவ் இருவரது இகலே.

வயலிடத்துப் பாகற்கொடியினது இலைகளைத் தாம் வாழ்தற்குரிய கூடாகப் பின்னிக் கொண்டன முயிறுகள். அக்கூட்டுள் முட்டையிட்டும் வாழ்ந்து வந்தன. கழனியிடத்தே இரைதேடியபடி வந்த நாரையொன்று அந்தக்

கூட்டை அலகால் குத்தி அலைத்தது. அதனால் செந்நெல்லும் வெள்ளரிசியும் கலந்து சொரிந்தாற்போல, முயிறுகளும் அவற்றின் முட்டைகளும் சொரியலாயின அத்தகைய ஊருக்கு உடையவன் நம் தலைவன். அவன் பரத்தையர் பலரையும் பெற்று இன்புறுதலை விரும்பியவனாக நம் இல்லத்துள்ளே வருகின்றான் அல்லன். தலைவியை அணைதலை விரும்பியே வருகின்றான். மாமை நிறத்தை உடையளாகிய தலைவியோ அவனைப் பெற்றுப் பெறுகின்ற நலத்தினையே நம்பித தன்னுடைய ஊடற்சினத்தினை விடமாட்டாளும் ஆகின்றனள். அன்னி என்பானும் ஆற்றலால் பெரியவன்; அவனினும் சிறந்தவன் திதியன் என்பவன் இருவரும் குறுக்கைப்பறந்தலை என்னுமிடத்தே கடும் போரிட்டனர். அப் போரினாலே திதியனின் காவன் மரமாயிருந்த புன்னை மரமானது வெட்டுப்பட்டு வீழ்ந்து துன்பத்தை அடைந்தது. அவ்வாறே, இவ்விருவர்களது போராட்டமும் என்னைச் சாகடிப்பதோடுதான் இனித் தீரும் போலும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/348&oldid=1706372" இலிருந்து மீள்விக்கப்பட்டது