உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பளிங்குசெறிந் தன்ன பல்கதிர் இடைஇடைப்
பால்முகந் தன்ன பசுவெண் நிலவின்
மால்பிடர் அறியா நிறையுறு மதியம்
சால்பும் செம்மையும் உடையை ஆதலின்
நிற்கரந்து உரையும் உலகம் இன்மையின் 5
எற்கரந்து உறைவோர் உள்வழி காட்டாய்
நற்கவின் இழந்தவென் தோள்போற் சாஅய்
சிறுகுபு சிறுகுபு செரீஇ
அறிகரி பொய்த்தலின் ஆகுமோ அதுவே?

பளிங்குகள் பலவும் ஒன்றாகச் செறிந்து விளங்கினாற் போலத் தோற்றும் பலவாய கதிர்களின் இடையிடையே, பாலை முகந்துவைத்தாற் போல விளங்கும் பசுமையான வெண்ணில வொளியையும் உடையையாய்! மலைக்குறவர் தேனிறாலைப் பெறுவதற்காக இட்டிருக்கும் ஏணியாலும் இடரப்பட்டு அறியாயாய் விளங்கும். எல்லாக் கலைகளும் நிறைவுற்ற திங்களே! நீதானும் நிறைவும் நேர்மையும் உடையை ஆவாய். ஆதலினாலே, நினக்கு மறைந்து வாழ்கின்றவொரு உலகமொன்றும் இவ்விடத்தே இல்லையாகும். ஆகவே, என்னைவிட்டுப் பிரிந்து எனக்கு மறைவுற்றவராக வாழும் காதலர் தங்கியுள்ள இடம் இதுவென எனக்குக் காட்டாயோ! (திங்கள் காட்டாதிருப்ப, அவளது வெறுப்பு மிகுதியாகின்றது; மேலும் கூறுகின்றாள்.) நல்லழகினை இழந்துபோய்ச் சாம்பிய என் தோள்களைப் போல, நீயும் இனிச்சிறுகச்சிறுக அழிந்தனையாய்க், 'கண்டறிந்த ஒன்றைக் காணோம்' எனப் பொய்த்தலால் உண்டாகிய பொய்க்கரியின் பழியினாலே அழிவுறும் அந்நிலைதான் இனி நினக்கும் உண்டாகுமோ?

கருத்து : ‘அவரை எனக்குக் காட்டாயாகிய நீயும் சிறுகச்சிறுக நின் நலனழிந்து கெடுவாய்' என்பதாம்.

சொற்பொருள் : பளிங்கு – கண்ணாடித் துண்டுகள். பசு நிலவு - பசிய தண்ணிய நிலவு. மால்பு – தேனெடுப்பார் பயன்படுத்துகின்ற நெடிய நூல் ஏணி, இதனால், நிலவு மேற்கு மலையைச் சார்ந்து மறையும் வரை விழித்திருந்தாளாய்த் தலைவி துன்பத்தில் உழன்றனள் என்பதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/383&oldid=1706945" இலிருந்து மீள்விக்கப்பட்டது