உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளங்கும். மால் + பிடர் = 'மால்பிடர்' எனக் கொண்டால் மேகத்தின் முதுகுப்புறம் என்று கொள்ளலாம். சால்பு – தகுதிப்பாடு; செம்மை – செவ்விய நேர்மை; குன்றிடை மறையுங் காலத்துக் தோன்றும் செவ்விதான செம்மைத் தன்மையுமாம். செரீஇ-குறைவுற்று. அறிகரி - அறிந்த ஒன்று; அறிகரி பொய்த்தல் – தானறிந்த உண்மையை மறைத்துப் பொய்ச் சான்று கூறுதல். இதனை, 'அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கில்லை' என்னும் குறுந்தொகை (குறு 184:11) யாலும் அறியலாம்.

விளக்கம் : உலகிடம் யாங்கணும் அறிவோய் ஆதலின் அவருள்ள இடத்தையும் அறிவை; அழிந்திருந்தும் எனக்கு அவரைக் காட்டித் தராயாய்ப் பொய்த்தலின் நீதான் சிறுசிறுகத் தேய்வுற்றனையாய் அழிவுற்றுக் செடுக என்கின்றனள் 'எற் கரந்து உறைவோர்' என்றமையின், தலைவன் நெட்டிடைக் கழிந்தோனாதலும் விளங்கும்; நெட்டிடையாவது நெடுந்தொலை இடைப்பட்டுக் கிடக்கின்றவொரு நாடு. இனித் தலைவனைப் பற்றிய செய்திகளைத் தூதுமூலங் கூடத் தலைவி பெற்றிவளாதலின், 'எற்சரந்து உறைவோர்' என்றனள் எனினும் பொருந்துவதாகும். அவரைப் பிரிந்துறையும் என்னைக் காய்ந்து வருத்துவதுபோல, என்னைக் கரந்து வாழும அவருள்ளவிடத்து அவரையும் இவ்வாறே வருத்துக; வருத்தின், அவர் என்னை நினைந்தாராய் என்பால் மீள்வர் என்றதும் ஆம்.

197. மழை தவழும்!

பாடியவர் : நக்கீரர்.
திணை : பாலை,
துறை : வரைவு நீள ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது.

[(து–வி.) வரைந்து கொள்ளுதற்குரிய பொருளோடு வேந்துவினை முடித்ததும் வருவதாகக் கூறிச் சென்றவனாகிய தலைவன், வருவதாகக் குறித்தகாலத்தே வாரானாயினான். அதன்பின்னரும் நாட்கள் பல கழிந்தன. அதனால் தலைவியின் பிரிவாற்றாமை மிகுதியாகின்றது. அதனைக் கண்ட தோழி, இவ்வாறு கூறித் தலைவியது பெருகிய துயரை மாற்றுதற்கு முயல்கின்றனள்.]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/384&oldid=1706946" இலிருந்து மீள்விக்கப்பட்டது