உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

410

நற்றிணை தெளிவுரை


மணிமேகலைக் காப்பியத்தைச் செய்தருளியவரும், சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் பாடக் கேட்டவரும், இளங்கோவுக்குக் கண்ணகியின் வரலாற்றுள் மதுரையெரிந்த பகுதிபற்றிய நிகழ்வைக் கூறியவரும் இவரே யாவர். பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறனைப் புகழ்ந்து பாடிய இவரது புறச்செய்யுளைப் புறநானூற்றுட் காணலாம் (புறம். 59). இவர் பாடியவாக இந்நூலுள் மற்றும் இரண்டு செய்யுட்களும், குறுந்தொகையுள் ஒன்றும், அகத்துள் ஐந்தும் காணப்படுகின்றன. பண்டை ஆடவரின் உளப்பண்பினைத் தலைவி கூற்றாக, 'இல்லோர்க்கு இல்லென்று இயைவது கரத்தல் வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும் பொருளே காதலர் காதல்' எனக் கூறும் நயம் (அகம்.53) வியத்தற்கு உரியதாகும். இவரைப் போதி மாதவர் கொள்கையினர் என்பர்.

செங்கண்ணனார் 123

இவரை மதுரைச் செங்கண்ணனார் எனவும் கூறுவர். கண்ணனார் எனப் பெயரிய சான்றோருள் இவரும் ஒருவர். 'செங்கண்' என்பது ஒருவகை அரச கருமம் எனவும் உரைப்பார்கள். இச்செய்யுளும் அகநானூற்று 39வது செய்யுளும் இவராற் செய்யப்பெற்றவை. தலைவன் தலைவியை விரைய மணந்து கொள்ளவேண்டுமென்னும் ஆர்வத்தால், அவன் கேட்குமாறு தோழி தலைவிக்கு உரைப்பதாக அமைந்த குறிஞ்சித்திணைச் செய்யுள் இதுவாகும். மூங்கில்கள் உராய்தலால் தீப்பொறி எழுந்து காடே தீப்பற்றிக் கொள்வதை மிகவும் இயற்கையாக எடுத்துக் கூறியிருக்கின்றார் இவர் (அகம் 39).

செம்பியனார் 112

'செம்பியன்' என்பது சோழர் குடியினர்க்குரிய பெயர்களுள் ஒன்றாதலால், இவரை அக்குடியில் தோன்றியவராகக் அருதலாம். காமமிக்கதனாலாய பெருந்துயரத்தினால் தலைவியானவள் தினை கவர்தற்கு வந்து படியும் கிளியை விளித்துக் கூறுவதாக அமைந்த காதற் சுவைமிகுந்த செய்யுள் இதுவாகும். காவற்கடனை மறந்தவளாகக் கிளியை நோக்கிப் புலம்பும் தலைவியது நிலையை, நம் கண்முன்னர் நிழலாடும் வண்ணமாக இவர் அமைத்துள்ள சொற்றிறம் இன்புறுதற்கு உரியதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/411&oldid=1711075" இலிருந்து மீள்விக்கப்பட்டது