உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாடிய சான்றோர்கள்

413


இவர் உறையூர் வீரை வேண்மான் வெளியன் தித்தனது மகனான போர்வைக்கோப் பெருநற்கிள்ளியைக் காதலித்து, அக் காதல் நிறைவேறாத போதும் அவன்பாற் கொண்ட அன்பிற் குறையாதாராய் அவனைப் பலவாறு பாடிச் சிறப்பித்தவர். அகம். 252; நற். 19, 87; புறம். 83, 84, 85 ஆகியன இவராற் பாடப்பெற்ற செய்யுட்களாம். கிள்ளியது வாழ்க்கையை ஒட்டிய பல செய்திகளையும் இவரது செய்யுட்களால் அறிகின்றோம். அழிசியின் ஆர்க்காட்டையும் இவர் குறித்துள்ளனர். இச் செய்யுட்களுள் வரும் 'வருவையாகிய சின்னாள் வாழாள் ஆதல் நற்கு அறிந்தனை சென்மே' எனவும், 'உள்ளூர் மரத்துத் துயிலும் வாவல் அழிசியின் பெருங்காட்டு நெல்லிக்கனியை உண்டாற்போலக் கனவுகாணும்' எனவும் உரைத்துள்ள நுட்பங்களைக் கற்று மகிழலாம்.

நக்கீரனார் 31, 86, 197

இவர் கணக்காயனார் மகனார் நக்கீரனார் எனக் கூறப்பெறும் புகழுடையார் ஆவார். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் காலத்தவர்; அக் காலத்திருந்த தலைவர்கள் பலரையும் பாடியுள்ளவர். அகம் 141ஆம் செய்யுளுள் கார்த்திகை மாதத்துக் கார்த்திகை விளக்கீடு விழாவினைப் பண்டைத் தமிழ் மகளிர் கொண்டாடும் பாங்கினை விரிவாக இவர் உரைத்துள்ளனர். திருமுருகாற்றுப்படையும் நெடுநல்வாடையும் இவராற் செய்யப்பெற்ற ஒப்பற்ற பெருநூல்களாம். இறையனாரின் களவியலது நுட்பங்களை விளக்கி உரைவகுத்தவரும். இவரே என்பர். இவர் வரலாறு மிகமிக விரிவானதாகும்; இவராற் செய்யப்பெற்றுக் கிடைத்துள்ள செய்யுட்கள் 37 ஆகும். 'உண்பது நாழி உடுப்பவை இரண்டே; பிறவும் எல்லாம் ஒரொக்கும்மே' என்னும் குரலைத் தமிழகத்து எழுப்பியவர் இவராவர் (புறம். 189). 'வேறு பன்னாட்டிற் கால்தர வந்த பலவுறு பண்ணியம் இழிதரு நிலவுமணல்' என (31)ப் பழந்தமிழ்க் கடற்றுறைகளையும், மேகங்கள் செறியும் சிறப்பையும் (197) இச் செய்யுட்களுட் கற்று இன்புறலாம்.

நம்பி குட்டுவனார் 145

குட்ட நாட்டினரும் அரசகுடித் தொடர்பை உடையவரும் ஆயினதால் இப்பெயரைப் பெற்றனர் போலும்! 'குறுந்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/414&oldid=1711079" இலிருந்து மீள்விக்கப்பட்டது