உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

414

நற்றிணை தெளிவுரை


தொகையுள் இரண்டும், இந்நூலுள் மூன்றுமாக ஐந்து செய்யுட்கள் இவர் செய்தவாகக் காணப்படுவன. இச் செய்யுள் நெய்தல்திணை சார்ந்த செய்யுளாகும், இதன்கண் இரவுக்குறி வந்தொழுகுவானாகிய தலைவனை, அதனைக் கைவிட்டு மணவினை பெறுதற்கு முயலுமாறு தூண்டும் தோழியது சொற்றிறத்தைக் கற்று இன்புறலாம்.

நல்லந்துவனார் 88

'அந்துவன்' என்னும் பெயரினர்; அந்துவஞ் சேரல் இரும்பொறை என வருவது இச் சொல்லின் வழக்காற்றுண்மையை வலியுறுத்தும். கலித்தொகைக் கடவுள்வாழ்த்தும், நெய்தல் பற்றிய 33 செய்யுட்களும் இவர் இயற்றியவையே. பரிபாடலுள் வையை நீரணி விழாவினைப்பற்றி அழகுறப் பாடியுள்ள செய்யுட்களைக் காணலாம். 'நம்மை நினைந்து பழமுதிர் குன்றமும் கண்தூர் அருவியாக அழும்' என இச் செய்யுளுள் இவர் கூறுந் திறம் இவரது நுட்பமான பெரும் புலமைக்கும் இயற்கையறிவுக்கும் எடுத்துக்காட்டாகும். உப்பைக் 'கடல்விளை அமுதம்' எனக் கூறும் சிறப்பையும் இச் செய்யுளாற் காணலாம்.

நல்லாவூர் கிழார் 154

நல்லாவூர்த் தோன்றிய வேளாண்குடியினர் இவராவர். பண்டைக் கால மணவினை நிகழ்ச்சிகளைப் பற்றிய செய்திகளை இவரது அகநானூற்றுச் செய்யுளால் அறியலாம் (86). இரவுக்குறித் தலைவன் சிறைப்புறமாக வரைவு கடாயதாக அமைந்த இச் செய்யுள். தலைவன் வரும் வழியேதத்தை எண்ணிக் கலங்கும் தலைவியது துன்புற்ற மனநிலையை நன்கு காட்டுகின்றது.

நல் விளக்கனார் 85

'நல் விளக்கம்' என்னும் ஊரினரென இவரைக் கொள்வார்கள். குறிஞ்சியைச் சிறப்பித்த இச் செய்யுள் ஒன்றே இவர் செய்ததாகக் கிடைத்துளது. 'கானவன் வேட்டமாக்கொணர்ந்த மானின் கொழுங் குறையைக் கிழங்கொடு காந்தளஞ் சிறுகுடிப் பகுக்கும் கொடிச்சியரது' பகுத்துண்டு வாழும் பண்பாட்டை இச்செய்யுளிற் காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/415&oldid=1711080" இலிருந்து மீள்விக்கப்பட்டது