பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாட்டு நலம் 113 வாழ்கின்ற மக்களின் செயல்திறனே என்பதை அவர்கள் வற்புறுத்துகின்றார்கள். இந்த அடிப்படை உண்மையினை அரசியல் அறிவுடன் தெளிந்த சிந்தனையும் பெற்ற, இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த ஒளவையார் நன்கு விளக்கியுள்ளார்கள். ஒரு நாடு வற்றாத நதிகள் பாய்ந்து வளம் பெறும் நிலப்பரப்பினைப் பெற்றிருக்கலாம். ஒரு நாடு மேடு பள்ளங்களைக் கொண்டோ, பாலைவனமாகவோ அன்றி வேறு வகையிலோ இருக்கலாம், ஆனால், வளமான நிலத்தில் வாழும் மனித சமுதாயம் சோம்பியிருக்கும் நிலையில் வாழுமாயின் அந்த நாடு நல்ல வளம் பெற்ற நாடாகுமோ? அதன் வளமெலாம் விழலுக்கிறைத்த நீராக அல்லவோ அமையும். அதே வேளையில் காடுமேடுகளைத் திருத்தி, எங்கோ ஒடுகின்ற பேராறுகளை எப்படி எப்படியோ திருப்பி, அவற்றின் நீரினைத் திருந்திய நிலங்களில் பாய வைத்து வளம் பெருக்கும் சமுதாயம் உள்ள நாடு, வரண்ட நிலை யிலும் வளம் பெற்ற நாடாகுமல்லவா? இன்று இந்த வகையில் எத்தனையோ நாடுகள் பாலைவனங்களைச் சோலைவனங்களாக்குவதைக் காண்கிறோம். பனிபடர் நிலங்களெல்லாம் பயிர்படர் நிலங்களாக மாற்றப்பெறுவதைக் காண்கிறோம். இந்த நிலை எதனால் உண்டாகின்றது; ஆம்! அங்கங்கே உள்ள மனிதனுடைய உலையா உழைப்பும் ஆற்றலுமே அந்த நாடுகளை வளமாக்குகின்றன. நம் பரந்த பாரத நாடு இயற்கை வளம் செறிந்தது. வற்றாத ஆறுகள் பல பாயப் பெறுவது; கனிவளம் மிக்கது; பற்பல வகைப்பட்ட இயற்கைச் செல்வங்களைப் பெற்றது. உரிமை பெற்றபின், நாட்டில் அவற்றை ஆராய்ந்து, வாழ்க்கைக்குப் பயன்படுத்தும் வகையில் முயற்சிகள் நடைபெறுகின்றன. எனினும் போதிய முன்னேற்றம் இல்லை என அறிஞர்கள் கணக்கிடுகின்றனர். காரணம் என்ன? நம்