பக்கம்:நல்ல தமிழ்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

மனித வாழ்வின் செம்மையை விளக்குவது மொழி. மொழியே மனிதனை மனிதனாக வாழவைப்பது; மொழியே மனிதனைப் பிற உயிர்களிடத்திருந்து வேறுபடுத்தி அவனை உயர்ந்தவனாக வாழ வைப்பது. மொழியே மனிதனின் அறிவைத் தெளிவுபடுத்தி, நல்லதன் நலனும் தீயதன் தீமையும் அறிந்து, நல்லதைச் செய்து அல்லதை நீக்கி வாழ வழிகாட்டி வரையறை செய்வது. மொழி இன்றேல் உலகில் வாழ்ந்த நாகரிகங்களையும் பண்பாட்டு நெறிகளையும் பிற சிறப்பியல்புகளையும் யாரால் உணர்ந்துகொள்ள இயலும்? இந்த மொழி என்ற ஒன்றே மனிதனைச் சென்ற காலத்தின் சிறப்பை எண்ண வைத்து, வருங்காலத்தில் பழுதிலா வாழ்வு வாழ வழிகாட்டியாய் அமைந்துள்ளது. சுருங்க கூறுவோமானால், ‘மொழியின்றேல் வாழ்வில்லை’ என்ற முடிவினைக் காட்டி விடலாம்.

இம்மொழியைப் பற்றிப் பலர் தப்புக் கணக்குப் போடுகின்றனர்; மனிதன் கருத்தைப் பரிமாறிக்கொள்ளப் பயன்படுவதுதான் மொழி என்றும், அதை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம் என்றும் பேசுவர். மக்கள் கருத்தைப் பரிமாறிக்கொள்வதே அதன் எல்லை என்று முடிவு கட்ட முடியுமா? உண்மையில் மொழியைப் பற்றி அறிந்தவர்கள் அப்படிச் சொல்லுவார்களா? அப்படியே எல்லை கட்டினாலும் மனிதன் கருத்தை மற்றவருக்கு உணர்த்துவது அத்துணை முக்கியமல்லவா? ஒருவர் கருத்தை மற்றவர் புரிந்துகொள்ளாத காரணத்தினால்தானே உலகில் வீட்டுக்கு வீடு சண்டையும் நாட்டுக்கு நாடு போரும் நடைபெறுகின்றன! எனவே, அக்கருத்துப் பரிமாறிக்கொள்வதற்குங்கூட நல்ல செம்மை சான்ற மொழி நலம் தேவைப்படுகின்றது என்ற உண்மையைச் சிலர் உணருவதில்லை. அப்படி உணராத காரணத்தாலேயே மொழியை எப்படி வேண்டுமானாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/7&oldid=1391520" இலிருந்து மீள்விக்கப்பட்டது