பக்கம்:நல்ல தமிழ்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

மாற்றியும் திருத்தியும் கெடுத்தும் குறைத்தும் வழங்கலாம் என வாதிடுவர். அதே வேளையில் அவர்கள் வேறொரு மொழி பற்றிப் பேசி அதன் வளம் ஓம்பப் பாடுபடுவர். இதனால் மொழி வெறி வளர்வதைக் காண்கிறோமேயன்றி, மொழி நலமும் அது போற்றும் பண்பாடும் மக்களிடையில் காண முடிவதில்லை. நல்ல மொழியே நாட்டை நாடாக்கி மனிதனை மனிதனாக வாழ வைப்பது என்பதை உணர வேண்டும்.

இந்த நல் உணர்விலேதான் பல அறிஞர்கள் உலகில் மொழி பற்றி ஆராய்கின்றார்கள். இன்று உலகில் இம்மொழி பற்றிய ஆராய்ச்சி ஒலி அளவையில் செல்லுவதாக இருப்பினும் முடிவில் மொழியின் திறம் காணும் நிலையிலேதான் அது வந்து நிற்க வேண்டும். இவ்வாறு உலக மொழிகளின் திறம் காணும் அறிஞர்கள் மொழி மக்கட் சமுதாயத்துக்குச் செய்த – செய்கின்ற – செய்ய இருக்கின்ற – தொண்டினை எண்ணி எண்ணிப் போற்றுகின்றார்கள். தாம் உயர்ந்தவர் என்றும் தமதே உயர்ந்தது என்றும் தருக்கும் சில மொழி வாதிகளுக்கு இம்மொழியாராய்ச்சி பல உண்மைகளை உணர்த்தி, அவர் தருக்கை நீக்க வழி காட்டுகின்றது. மற்றும் இம்மொழி ஆய்வு உலகில் வாழ்ந்த பல மொழிக் குடும்பங்களை விளக்கி, அவை தம்முள் கலந்து வாழ வழி உள்ளமையையும் காட்டுகின்றது. இவற்றையெல்லாம் அறியாது சிலர் மொழி வெறி கொண்டும், மனம் போனபடி பேசியும் மொழியின் நலத்தைக் கெடுக்கின்றனர். நாட்டில் மொழி நலம் பெறுவதே மக்கள் வாழ்வு நல்ல முறையில் அமைவதற்கு அடிப்படை என்ற உணர்வு மலரவேண்டும்.

இந்த மொழிக் குடும்பங்களுள் தொன்மை வாய்ந்த ஒன்று திராவிட மொழிக் குடும்பம். அக்குடும்ப மொழிகளுக்குள்ளே சிறந்ததும் தொன்மை வாய்ந்ததும் தமிழே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/8&oldid=1391521" இலிருந்து மீள்விக்கப்பட்டது