பக்கம்:நல்ல தமிழ்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

யாகும். அத்தமிழ் வழங்கும் நாட்டில் பிறந்து தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அனைவரும் பெருமைக்கு உரியவர்களே. அவர் அனைவரும் அத்தமிழ் மொழியின் தொன்மைச் சிறப்பையும் அமைப்பு முறைகளையும் ஆக்கப் பணிகளையும் எண்ணிப் பார்க்க வேண்டும். அவ்வாறு எண்ணும்போது அதன் இலக்கண வரம்பும் வழக்கியல் முறைகளும் நன்கு விளங்கும். அவ்விளக்கமே நாட்டுக்குத் தேவை. மொழியின் இயல்பறிந்து, அதன் மரபு கெடாது அதை வழங்குவதே அதன் மக்கள் அதற்குச் செய்யும் தொண்டு. காலவேகத்தாலும் பிறர் சேர்க்கையாலும் இந்த அடிப்படையை மறந்து சிலர் மனம் போன போக்கில் சென்று தமிழின் எளிமையையும் இனிமையையும் மரபையும் தூய்மையினையும் பாழ்படுத்துகின்றனர். அவர்கள் மொழியை வளர்ப்பதற்குப் பதிலாக மொழியைக் கொலை செய்கின்றவர்களே எனப் பல நல்லவர் நைந்து நைந்து கண்ணீர் விடுகின்றனர். அறிஞர் திரு.வி.க. அவர்கள்,

‘தமிழினைப்போல் இனிமைமொழி
        சாற்றுதற்கும் இல்லை இந்நாள்
தமிழரைப்போல் மொழிக்கொலையில்
        தலை சிறந்தோர் எவர் உளரே!’

என்று நைந்து பாடி உயிர் நீத்தார். இந்த நிலை இன்னும் நாட்டைவிட்டு நீங்கவில்லை.

அரசாங்க அலுவலர்களும், மாணவர்களும், நாளிதழ் எழுதும் எழுத்தாளர்களும் பிழை நீக்கி எழுதும் முறையைப் பயின்றுகொள்ளல் இன்றியமையாது வேண்டப்படுவதாகும். சில பள்ளி நூல்களிலும் கல்லூரி நூல்களிலுங்கூடப் பிழைகள் மலிந்துள்ளமையைக் காண்கிறோம். அவை நன்கு ஒப்பு நோக்காமையால் உண்டாகும் பிழைகளேயாகும். அவையாவும் எளிதில் நீக்கக் கூடியனவே. தமிழ் மொழியைப் பிழையின்றி எழுதுவதற்கு நல்ல இலக்கண நூல்கள் தொல்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/9&oldid=1391523" இலிருந்து மீள்விக்கப்பட்டது