பக்கம்:நல்ல தமிழ்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

காப்பியனார் காலந்தொட்டு இன்று வரை வந்துகொண்டே உள்ளன. அவை அனைத்தும் அனைவராலும் படித்து அறிந்துகொள்ள முடியாதனவாயிருக்கலாம். எனவே, சிலர் அவற்றின் அடிப்படைகளைத் தொகுத்து அவ்வப்போது சிறு சிறு நூல்களாக வெளியிடுகின்றனர். மேலை நாட்டிலிருந்து சமயம் பரப்ப வந்த போப்புப் பாதிரியார், இளைஞர்களுக்கு அத்தகைய இலக்கண நூல்களை முதன்முதல் எழுதித் தந்தார் என்பர். இன்று பலர் இத்துறையில் கருத்திருத்துகின்றனர். இத்துறையில் பூத்த ஒரு மலரே இந்த ‘நல்ல தமிழ்’.

இன்றைக்குக் கால்நூற்றாண்டுக்கு முன் அமுதசுரபி ஆசிரியர் திரு வேம்பு அவர்கள் தமிழ் இலக்கண முறையினையும் மரபினையும் தங்கள் வாசகர்களும் பிறரும் எளிமையில் அறிந்து கொள்ளும் வகையில், எளிய நடையில் விளக்கி, தொடர்ந்து தம் அமுதசுரபியில் எழுத வேண்டும் எனக் கேட்டார்கள். அதற்கு முன்பே நான் சில சில தனிக்கட்டுரைகளும் சீவகன் வாழ்வைப் பற்றித் தொடர் கட்டுரைகளும் அவர் கேட்டுக்கொண்டபடியே எழுதித் தந்தேன். அவற்றை வெளியிட்ட பின் அவற்றைத் தொகுத்து நூலாக்கித் தந்தார்கள். அந்தச் சீவகன் கதை பல்கலைக்கழகத்துப் பாடமாக அமைய, அதன் வருவாய் அனைத்தையும் நான் செயலாளனாக இருந்து தொடங்கிய ஷெனாய் நகர் திரு. வி. க. உயர்நிலைப் பள்ளிக்குத் தந்து உதவினேன். அப்படியே அதற்கு முன் என்னுடைய ‘கடவுளர் போற்றும் தெய்வம்–கண்ணகி’ என்ற நூல் பத்தாம் வகுப்பிற்குப் பாடமாக அமைய, அதன் வருவாயினை நான் செயலாளனாக இருந்து தொடங்கிய எங்கள் ஊர் (வாலாஜாபாத்) உயர்நிலைப்பள்ளிக்குக் கொடுத்து உதவினேன். அமுதசுரபியின் பதிப்பாசிரியரும் அவர்தம் இளவல்களும் அது அச்சிடப் பெற்ற இராசன் அச்சக உரிமையாளரும் எனக்கு அறிமுகமானவர்களாதலால் இந்த இலக்கணக் கட்டுரைகளையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/10&oldid=1391710" இலிருந்து மீள்விக்கப்பட்டது