பக்கம்:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

நல்ல தீர்ப்பு


தோரை : போரசு, பேரரசி இருவருக்கும் அன்புக்கு ஒருத்தி முல்லை இளவரசி; நாளைய பட்டத்தரசி அவள் இனிது வாழ்க! பொன்னி : பிறை நாட்டின் தனியரசி முல்லை. அவளின் அடக்கம் அன்பு நன்றியறிதல் ஆகிய நற் பண்புகள் அவளுக்குள்ள மேன்மையை ஆயிரம் பங்கு அதிகப்படுத்துகின்றன.

சாலி : ஏன் தாழை நீ என்ன சொல்லுகின்றாய்?

தாழை : நம்மிடத்தில் அவள் அன்புடையவள். அவள் ஆட்சிக் காலத்தில் நாட்டு மக்கள் மேல் அவள் அன்புடையவளா யிருத்தல் வேண்டும். இருப்பாள். நல்லவள்.

சாலி : கிள்ளை நம்முடன் வரவில்லை. முல்லைக்குக் கிள்ளை மேல் மிக்க அன்பு. உயர்ந்த அணிகள், பொருள்கள் நாம் தந்தோம். கிள்ளை காசு பெறாத அலங்கல் கழுத்தில் இட்டாள் அதற்காக முல்லை இளவரசி கிள்ளையைத் தழுவிக் கொண்டாள். கண்டீர்களே! கிள்ளை எப்படி எவரிடம் வளைந்து கொடுக்க வேண்டும் என்பதை நன்றாய் அறிந்தவள். முல்லையும் பசப்புக்கு மகிழ்பவள் கிள்ளையின் வஞ்சகம் முல்லைக்குத் தெரியாது. தெரிந்து கொள்வாள்.

தோரை : மெய்தான்! நம்மிடம் ஒருமாதிரி; அவளிடம் வேறு மாதிரிதான் நடந்து கொண்டாள் முல்லை!

பொன்னி : கிள்ளை கொண்டுவந்தது எளிய பொருள். அதற்காக முல்லை வருந்தவில்லை என்பதைக் காட்ட அவளிடம் கொஞ்சம் அதிக அன்பைக் காட்டினாள் வெளிக்கு. அது தவிர முல்லைக்கு நம்மேல் உள்ள அன்பு குறைவு என்று நாம் எண்ணலாமா?

சாலி : சரி உனக்குத் தெரிந்தது அவ்வளவுதான். போகலாம் விரைவாய்!

[மறைதல்]