அங்கம் 3
காட்சி 1
அரண்மனையின் ஒரு புறத்தில், முல்லை, கிள்ளை, சாலி
மூவரும் பேசியிருக்கிறார்கள்.
கிள்ளை : இளவரசி! ஏதாவது படிக்கலாமே
சாலி : வேண்டாம் ஏதாவது விளையாடினால் நன்றாய் இருக்கும்.
முல்லை : படிக்கலாம் கிள்ளை! நீ போய், அம்மா
நீராடும் அறைக்கு இந்தப் புறத்தில் ஊஞ்சலின்
மேல் கவிதை நூல் இருக்கிறது. எடுத்து வா.
[அவள் சென்று எடுத்துவந்து, தானே
அதைத் திறந்து பார்க்கிறாள்.]
கிள்ளை : இதைக்கேள் ! சாலி, கவனமாய்க் கேள்
நீயும்.
பச்சை பசுந்தழைக் காட்டினிலே ஒரு
பக்கத்தில் பூத்திட்ட முல்லையைப் பார்
அச்சடையாளம் நல் வான்குளத்தில் மின்னும்
ஆயிரம் மீனெனத் தோன்றுமடி !
அச்சில் அடித்திட்ட வெள்ளிப் பணம் கையில்
அள்ளி இறைத்தது போல் இருக்கும்!
இச்சை நறுமணத் தால்அழைக்கும்--முல்லை
ஏன் என்று பார்க்கையிலே சிரிக்கும்!
[முல்லை சிரித்தாள்.]
கிள்ளை : முல்லை, ஏன் என்று பார்க்கையிலே
சிரிக்கும் !
சாலி : முல்லைக்கு முல்லைப் பொட்டு!
[கிளியின் கூச்சல் கேட்கிறது.]