அங்கம் 5
காட்சி 1
[வீட்டில் படைத்தலைவன் மாழையும், கண்ணி
என்னும் அவன் மனைவியும் தாங்கொணாத்
துன்பத்தோடு தலை சாய்த்து நாற்காலியில்
துவள்கின்றார்கள். எதிரில் கண்ணீர் ததும்பக்
கிள்ளை நிற்கிறாள்]
மாழை : நீ எடுக்கவில்லையானால், சாலி ஏன்
அப்படிச் சொல்லுகிறாள்?
கிள்ளை : என்னை ஏன் அவள் இத்தனை பெரிய
குற்றத்திற்கு உட்படுத்துகிறாள் என்பது எனக்கே
விளங்க வில்லை. அவள் முழுதும் பொய்
சொல்லுகிறாள். அன்னை தந்தைக்கும் தெரிவிக்காமல்
அந்த மாணிக்கக் கணையாழியை நான் எப்படி
அணிந்து கொள்ள முடியும்? அப்பா, இத்தனை
பெரிய குற்றம் நான் இழைப் பவளா? இல்லை.
இல்லவேயில்லை அன்னையே!
கண்ணி : நாழிகையாகிறது மன்றுநோக்கி
கூட்டிச் செல்லுங்கள்.
மாழை : நான் போகமாட்டேன் மானக்கேடு
தலை தூக்கமுடியவில்லை. மகளே, நீ போ.
அங்கேயாவது உண்மை கூறு!
[ஓவென்று அலறிக்கொண்டு கிள்ளை
ஓடுகிறாள்]