பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
24 நல்வழிச் சிறுகதைகள்
 

தலைக்கு மேலே மாங்காய்கள் காய்த்துத் தொங்குகின்றன. கைக்கோலை வீசி எறிந்தால் ஏதாவது விழும் என்ற எண்ணம் அந்தக் குருடனுக்கு ஏற்பட்டது.

தன் கைக்கோலை எடுத்தான். மேல் நோக்கி அதை வீசி எறித்தான்.

கைக்கோல் சில்லென்ற ஒசையுடன் மேல் நோக்கிச் சென்றது. மரக்கிளைகளின் ஊடே சிக்கிக் கொண்டது.

மாங்காயும் விழவில்லை. கைக்கோலும் பறி போயிற்று.

குருடன் என்ன செய்வதென்று தெரியாமல் சிறிது நேரம் தயங்கிக் கொண்டிருந்தான். பிறகு குருட்டுத்தனமாகத் தான் செய்த செயலை எண்ணி நொந்துகொண்டே, கைக்கோல் இல்லாமலே அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டான். வழியில் பல தொல்லைகளை அனுபவித்துக் கொண்டு தன் இருப்பிடத்தையடைந்தான்.


கருத்துரை:- குருட்டுத்தனமான நம்பிக்கையோடு எந்தச் செயலையும் செய்யக்கூடாது. அவ்வாறு செய்வதால் எண்ணியதும் நிறைவேறாமல், இருப்பதையும் இழக்க நேரிடும்.