பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அடியும் ஆதரவும்

க்கத்து வீட்டிலே ஒரே கூச்சலும் கூப்பாடுமாயிருந்தது. தங்கம்மாள் ஒடிப்போய்ப் பார்த்து விட்டு வந்தாள். "என்ன நடந்தது ?” என்று விசாரித்தார் பொன்னப்பர்.

"ஆசிரியர் நமசிவாயம் கடன் வாங்கியிருந்தாராம். கடனைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. கடன் கொடுத்த முரடன் கடனைத் திருப்பிக் கொடுக்கிறாயா இல்லையா என்று கேட்டு அடித்துக் கொண்டிருக்கிறான்" என்று சொன்னாள் தங்கம்மாள்.

"ஆசிரியர் நமசிவாயத்தை அடிக்கிறானா ? அப்பாவியாயிற்றே அவர். இரு, இதோ வருகிறேன்!” என்று சொல்லிப் பொன்னப்பர் எழுந்தார். பக்கத்து வீட்டுக்கு ஓடினார். ஆசிரியர் நமசிவாயத்தை அந்த முரடன் அப்போதும் அடித்துக் கொண்டுதான் இருந்தான். பொன்னப்பர் அவன் மேல் பாய்ந்தார். அவன் கையில் இருந்த தடியைப் பறித்தார். அவனைத் தூணோடு தூணாகச் சேர்த்து வைத்துக் கட்டினார். அதன்பின் நமசிவாயத்தை நோக்கி, "என்ன நடந்தது ? இவனிடம் எவ்வளவு கடன் வாங்கினீர்கள் ?" என்று விசாரித்தார்.