பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10 நல்வழிச் சிறுகதைகள்
 

வேட்டைக்குப் போகும் போதும் இருவரும் ஒன்றாகவே சென்றார்கள். அவர்கள் பழகிய விதத்தைக் கண்ட மக்கள், ‘இவர்கள் அண்ணன் தம்பிகளைப் போல் பழகுகிறார்கள்’ என்று பேசிக் கொண்டார்கள்.

மக்கள் தங்களைப் பற்றிப் பேசிக் கொள்ளும் செய்தி ஒரு நாள் அவர்கள் காதுக்கே எட்டியது. இந்தச் செய்தியைக் கேட்டது முதல் அரியநாதன் ஒரு மாதிரியாக இருந்தான். அவன் மனம் எதையோ நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தது.

மலை நாட்டு வீரன், அரியநாதன் திடீரென்று கவலைப்படுவதன் காரணத்தைக் கேட்டான்.

“நானும் நீயும் அண்ணன் தம்பி போல் பழகு வதாக மக்கள் பேசிக் கொள்ளுகிறார்கள். ஆனால், எனக்கு உண்மையிலேயே ஒரு தம்பி இருக்கிறான். அவன் உன் மாதிரி என்னுடன் அன்பாகப் பழக வில்லை. பகைவனாகக் கருதிப் பழகுகிறான். இதை எண்ணிப் பார்த்தபோது என் மனம் துன்பமும் கவலையும் அடைகிறது” என்று அரசன் அரிய நாதன் கூறினான்.

“அரசே, கவலைப்படாதீர்கள். எனக்கு ஒர் ஆண்டு காலம் தவணை கொடுங்கள். உங்கள் தம்பியை உங்களிடம் அன்புறவு கொள்ளும்படி செய்கிறேன் !” என்றான் மலை நாட்டு வீரன்.

‘உண்மையாகவா ? உன்னால் முடியுமா ?” என்று ஆர்வத்தோடு கேட்டான் அரியநாதன்.