பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
14 நல்வழிச் சிறுகதைகள்
 

பேச்சுவாக்கில், தன் அண்ணனுடன் பகைமை ஏற்பட்ட, கதையைக் கூறினான் வடுகநாதன். தன்னை, அண்ணன் நாட்டை விட்டு விரட்டி விட்டதாகக் கூறினான். தன் குறைகளை மறைத்து அவன் தன் அண்ணன் மீது குற்றஞ்சாட்டிப் பேசினான்.

மலைநாட்டு வீரனுக்கு அவர்கள் கதை முழுவதும் நன்றாகத் தெரியும். இருந்தாலும் தெரியாதவன் போலவே பேசினான்.

“அரசே, தங்கள் அண்ணன் தங்களை விரட்டியடித்தது தங்களுக்கு மட்டுமல்ல, அவருக்குமே பேரிழப்புதான். தங்களைத் தன் படைத் தலைவராக வைத்துக் கொண்டு நாட்டை ஆண்டிருந்தால், தங்கள் போர்த் திறமையால், எத்தனை நாடுகளையோ வசப்படுத்தியிருக்கலாம். நீங்கள் இருவரும் ஒரு பேரரசின் தலைவர்களாக வளர்ந்திருக்கலாம். தங்கள் அண்ணன் தங்களை விரட்டியடித்ததன் மூலம் இந்த வாய்ப்பை இழந்து விட்டார்” என்று மலைநாட்டு வீரன் கூறினான்.

மலை நாட்டு வீரன் வடுகநாதனுடன் சேர்ந்து அரியநாதனைக் குறை கூறிப் பேசினாலும், அது வடுகநாதன் உள்ளத்தைச் சுட்டது .

“அண்ணன் என்னை விரட்டவில்லை; அவன் விரட்டும்படியாக நான்தான் நடந்துகொண்டேன் !” என்று அவன் தன்னைத் தானே நொந்து கொண்டான். மலை நாட்டு வீரன் கூறிய கருத்து அவன் மனதில் ஆழப் பதிந்து பெரிதாக வளர்ந்தது.