பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நாரா. நாச்சியப்பன் 21

ஒரு முறை கண்ணன் தன் நண்பர்கள் சிலருடன் ஆற்றங்கரைக்குக் காற்று வாங்கச் சென்றிருந்தான். காற்று வாங்கிக் கொண்டே வைகையாற்று மணலில் உட்கார்ந்திருக்கும்போது, நண்பர்கள் பல செய்திகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களில் ஒருவன், “இந்த உலகம் வரவரக் கெட்டுப்போய் விட்டது. நல்லவர்களைக் காண்பதே அரிதாயிருக்கிறது. சொல்லப் போனால், இந்த உலகத்தில் நல்லவர்களே இல்லை என்றுதான் கூற வேண்டும் !” என்று குறிப்பிட்டான்.

இதைக் கேட்ட கண்ணன் தன் நண்பனுடைய கருத்தை வன்மையாக மறுத்துரைத்தான். நமசிவாயத்தைப் பற்றி அவனுக்கு எடுத்துக் கூறினான். அவருடைய நல்ல பண்புகளைப் போற்றிப் பேசினான். ஊர் மக்களுக்கு அவர் தம்மாலியன்றவரை செய்து வரும் உதவிகளையெல்லாம் விளக்கிக் கூறினான்.

நண்பர்கள், இப்படி ஒரு நல்ல பண்புள்ள மனிதர் இருக்கிறாரா என்று வியந்தார்கள். அதனால் இன்னொரு பலனும் ஏற்பட்டது. அந்த நண்பர்கள் பேசிக் கொண்டிருந்த இடத்திற்குப் பக்கத்தில் ஒரு பெரிய மனிதர் உட்கார்ந்து காற்று வாங்கிக் கொண் டிருந்தார். அவர் இளைஞர்களின் பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு செல்வந்தர்.

ந.சி-112